சென்னை: தைப்பூச திரு நாளான இன்று(பிப்.,05) தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்கதர்கள் குவிந்தனர். பால்குடம் சுமந்து , அலகு குத்தி, காவடி எடுத்து, மொட்டை அடித்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பழநி:
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக குவிந்தனர். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. காவடி, அலகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிப்பட்டனர்.

திருச்செந்தூர்:
தென் மாவட்டங்களில் உள்ள மக்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் அரோகரா கோஷத்துடன், வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அலகு குத்தி, காவடி எடுத்து பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் கூட்டம் கடற்கரையில் கடல் போல் காட்சியளித்தது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கடல் போல் அலை மோதியது. பக்தர்கள் வரிசையில் அமைதியாக நின்று சாமி தரிதனம் செய்தனர்.
வடபழநி:
வடபழநி ஆண்டவர் கோவிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பக்தர்கள் எடுத்து வந்த பாலால், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.பின், செண்பகப்பூ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
வெளிநாடுகளிலும் கோலாகலம்
வெளிநாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா , மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் வாழும் தமிழர்கள், பல்வேறு பகுதிகளில், பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.