தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை உக்கடம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொள்முதலுக்காக கொண்டுவரப்பட்ட நெல்மணிகளின் ஈரப்பதத்தை, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின் அமைச்சர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் நாளை நிவாரணம் அறிவிப்பார் . ஆய்வு செய்த வகையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்பிக்க உள்ளோம். மழைக்கு முன்பாக நேரடி முதல் நிலையங்களில் கொண்டு வரப்பட்ட நெல்லை ஆய்வு செய்தபோது,15 சதவீத அளவிற்கு ஈரப்பதம் உள்ளது. மழைக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட நெல்லை ஆய்வு செய்தால் 21 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு, முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உரிய நேரத்தில், ஈரப்பதம் தளர்வுகளை பெற்று தருவார்.
இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். முதல்வர் உத்தரவின் பேரில், தமிழகத்தில்,3,500 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எங்கு கேட்டாலும் திறக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. ஞாயிற்றுக்கிழமைகளில் கொள்முதல் நிலையங்கள் சிறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நெல் அதிகமாக வரும் பட்சத்தில் விவசாயிகள் காத்திருக்காத வகையில்,கூடுதலாக இயந்திரங்களை வைத்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement