உட்லண்ட்ஸில் குதுாகலம்

கடல் கடந்து சென்று வாழும் தமிழர்கள் அங்கு சென்ற பிறகு தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் ரொம்பவே கொண்டாடுகின்றனர்.

தமிழர்களின் அடையாளமான பொங்கல் விழாவினை சமீபத்தில் வெகு விமரிசையாக கொண்டாடி இருக்கின்றனர்.

டெக்டாஸின் வடக்குப் பகுதியில் உள்ள உட்லண்ட்ஸ் நகரில் உள்ள இந்து கோயிலில் இந்த வருடத்திற்கான பொங்கல் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதில், உட்லண்ட்ஸில் உள்ள தமிழ் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தமிழர்கள் மட்டுமல்லாமல், அப்பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால், சுமார் ஆயிரம் பேர் வரை அங்கே கூடினர்.

கோயில் வளாகத்தில் பானையில் பொங்கல் வைத்த பின்னர், சாமி கும்பிட்டுவிட்டு பொங்கல் சாப்பிட்ட கையோடு, நம்ம ஊர் பழக்கப்படி நடந்த விளையாட்டுப் போட்டியில் அனைவரும் களம் இறங்கினர். சிலம்பாட்டம், உறியடி என நடைபெற்ற போட்டியில் அனைத்து வயதினரும் உற்சாகமாக கலந்துகொண்டனர். மறுபுறம், பெண்களுக்கான கரகாட்டம், கும்மி போன்ற நடன கலைநிகழ்ச்சிகளும் நடந்தது இதில் பெண்கள் சிலம்பம் சுற்றுவதை கண்டு பார்வையாளர்களாக வந்திருந்த அமெரிக்கர்கள் வியந்து போயினர்.
“நாங்களும் நடனம் ஆடுவோம்” என வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ஆண்கள் ஆடிய ஒயிலாட்டம் பலராலும் பாராட்டப்பட்டது. பொங்கல் விழாவிற்கு வந்திருந்த எல்லோருக்கும் தலைவாழை இலை போட்டு, சாம்பார், புளிக்குழம்பு, மாங்காய் பச்சடி தொடங்கி பாயாசம், அப்பளம் வரை விருந்து போட்டு அனுப்பினர்.
”ஊரில் இருந்தால் சொந்த பந்தங்களோடு பொங்கல் கொண்டாடியிருப்போம். இந்த குறையை போக்க, எல்லோரும் சேர்ந்து கோயிலில் பொங்கல் விழா கொண்டாடினோம். விழாவிற்கான வேலைகள் அனைத்தையும் நாங்கே பிரித்துக்கொண்டு செய்து முடித்தோம். இதுபோன்ற ஒரு பொங்கல் விழாவை அமெரிக்காவில் எங்குமே பார்த்திருக்க முடியாது. நம்ம கிராமத்தில் ஒரு பொங்கல் விழா எப்படி நடக்குமோ அதே போல நடந்தது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அன்று ஒரு நாள், உட்லண்ட்ஸ் இந்து கோயில் வளாகம், குட்டி தமிழ்நாடகாவே மாறிவிட்டது” என்றனர் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்த டெக்சாஸ்வாழ் தமிழர்கள்.