புலிக்கு பிறந்தது பூனையாகாது என்ற பழமொழியை உணர்த்தி, தந்தையை தொடர்ந்து 33 ஆண்டுகளாக ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 50 தங்க பதக்கங்களை வென்று 43 வயதிலும் கட்டுடல் மேனியுடன் ஒளியாய் மின்னுகிறார். இதோடு 1000 ஆணழகன்களை உருவாக்கி அவர்கள் வாழ்விலும் ஒளி ஏற்றி மாஸ் காட்டுகிறார் திண்டுக்கல் சவுராஷ்டிரா காலனியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் ஜான் வில்லியம் லாரன்ஸ்.
திண்டுக்கல் நகரில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி உள்ள இவர் கூறியதாவது...
என் தந்தை அக்காலத்திலிருந்து உடற்பயிற்சி செய்பவர். அவரை பின்பற்றி 10 வயதிலிருந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். தந்தை பயிற்சி கொடுப்பார். சிறுவயதிலிருந்தே வெயிட் லிப்டிங் போட்டியில் கலந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததால் 1997ல் ஆணழகன் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். மாநில அளவில் 2010ல் திருநெல்வேலியில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றேன். எனக்கு நண்பர்கள், உறவினர்கள் கொடுத்த ஊக்கத்தினால் தேசிய அளவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. படிப்பிலும் ஆர்வம் இருந்ததால் எம்.பி.எட்., படித்தேன். பள்ளியில் சில நாட்கள் வேலை பார்த்தேன். சாதனைகளை படைக்க நினைத்து தந்தை நடத்திய ஜிம்மை நான் நடத்த ஆரம்பித்தேன்.
தினமும் அதிகாலை 4:00 மணிக்கு உடற்பயிற்சி செய்வேன். என்னை போன்று பல கனவுகளோடு வரும் வாலிபர்கள் 1000 பேரை கட்டுடல் மேனியாக செதுக்கி அவர்களையும் பல போட்டிகளில் பங்கேற்க அழைத்து சென்று வெற்றியடைய செய்துள்ளேன்.பாடி பில்டிங் என்பது தனிக் கலை. நம் உடலை வருத்தினால் தான் அதனை செய்ய முடியும். வலியை உள்வைத்து சாதனையை வெளிக்காட்டுவது தான் இந்த விளையாட்டு. அதை நான் விரும்பி செய்கிறேன். உடற்பயிற்சி மனிதனுக்கு நோயில்லா வாழ்வை தரும். மனதில் ஏற்படும் காயங்களுக்கு பாடிபில்டிங் சிறந்த மருந்தாக அமையும்.
இவரை வாழ்த்த... 99651 77577