அகமும் முகமும் அழகாய் தெரிய இயற்கை பொருட்களை சார்ந்திருந்தால் போதும். சமையலறை பொருட்களே முகத்தை பேரழகாய் எடுத்துக் காட்டும். உடல் வசீகரம் பெற பூக்களை டீயாக தயாரித்து பருகலாம் என்கிறார் மதுரையைச் சேர்ந்த சாய் ஒண்டர்டச் நிர்வாக இயக்குநர் மைதிலி.
இவர் சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த குளோபல் உலக சாதனைக்கான சமையல் களத்தையும் விட்டு வைக்கவில்லை. மழலையர்கள் முதல் மாணவிகள், குடும்பத்தலைவிகள், உணவு நிபுணர்கள் என 100 பெண்கள் 'நெருப்பில்லாமல் சமையல் செய்வோம்' என்ற உலக சாதனைக்காக ஒன்று கூடினர். மகள் ஸ்வேதா கண்ணனுடன் பங்கேற்று இருவருமே குளோபல் உலக சாதனை குழுவினரிடம் சான்றிதழ் பெற்றனர்.
இயற்கையை வசமாக்கிய சாதனை பதிவுகள் குறித்து மைதிலி பேசியது:ஆர்கானிக் உணவுகளை ஒருங்கிணைக்கும் வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து சிறுதானிய அவல், பிற உணவுகளை வாங்கி விற்கிறேன். மேக்கப் நிபுணராக இருந்தாலும் ரசாயனம் பக்கம் செல்வதில்லை. சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு பேஷியல் செய்கிறேன். மேரிகோல்டு, லாவண்டர், தாழம்பூவிலிருந்தும், சில விதைகளில் இருந்து தயாரிக்கும் இயற்கை சீரம் கலந்து 'பேஸ்பேக்' தயாரிக்கிறேன்.
முருங்கை விதை எண்ணெய் தோல் பளபளப்பை ஏற்படுத்தி நிறத்தை அதிகரிக்கச் செய்யும். கொடைக்கானல் ரக அழகுபூக்கள், வரவேற்பறை செடிகளை உற்பத்தி செய்கிறேன். ஆக்சிஜன் தரும் தாவரங்களை வீட்டில் வளர்க்கலாம். சங்குபுஷ்பம், டயாண்டஸ், மல்லிகைப்பூ, நந்தியாவட்டை, சாமந்தி, தாமரை பூச்செடிகளை வளர்த்து அதன் பூக்களை எடுத்து டீயாக சாப்பிடலாம். சிறுதானியத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம் என்பதால் அதற்கேற்ற உணவுகளை தயாரிக்கவும் கற்றுத் தருகிறேன்.
ராஜபாளையத்தில் சரண்யா என்பவர் நடத்திய குளோபல் உலக சாதனை குழு நிகழ்ச்சியில் மகளுடன் பங்கேற்றேன். 100 பேரும் 10 நிமிடத்தில் 100 வித உணவு தயாரிக்க வேண்டும்.நெருப்பில்லாத சமையல் என்பதால் அதற்கேற்ற காய்கறி, பழம், தானியங்களை வெட்டி தயாராக வைத்திருந்தோம். எல்லாருமே முடித்தபோது 5 நிமிடம் 13 வினாடிகளே ஆனது. நிர்ணயித்த 10 நிமிடத்திற்கு முன்பாக முடித்ததால் சாதனை பக்கத்தில் இடம்பெற்றோம். நான் கேழ்வரகு அவலில் கேரட், வெள்ளரி, மல்லி, தழை சாட் மசாலா, லெமன், சிறுஞ்சீரகம், மிளகுப்பொடி, மிளகாய் துருவல், உப்பு சேர்த்து முதியவர்களுக்கான எளிய உணவை தயாரித்திருந்தேன்.
நுங்கு, இளநீர், சங்குபுஷ்பம், கற்றாழை ஜூஸ் வகைகள், ஆவாரம்பூ சாறு, லட்டு, உலர்பருப்பு லட்டு என 100 வித உணவுகளை குழுவினர் பார்வையிட்டு சான்றிதழ் வழங்கினர். மதுரையில் இதேபோல உலக சாதனை நிகழ்த்த உள்ளோம் என்றார்.
இவரிடம் பேச :94424 04447.