காங்கேயம்: வெள்ளகோவில் அருகே அரசு பஸ்சும், ஆம்னி-வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த மருதாச்சலம்,50, இவர் மனைவி பிரமிளா,45, அதே பகுதியை சேர்ந்த தேவி,55, இவருடைய மகன் லோகேஸ்வரன்,26, மற்றும் அனுரூபா,17, தர்சினிபிரியா,17, ஆகிய ஆறு பேர், மாருதி ஆம்னி வாகனத்தில் திருப்பூரில் இருந்து வெள்ளகோவில் அருகே உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றனர். பின்பு விஷேசம் முடிந்து திரும்பி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கோவையில் இருந்து அரசு பஸ் 30 பயனிகளுடன் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வெள்ளகோவில் அருகே வெள்ளமடை பகுதியில், இன்று(பிப்.,05) எதிர்பாரவிதமாக அரசு பஸ்சும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் ஆம்னிவேன் சுக்குநூறாக சிதறி, வந்தவர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்து ஆம்னிவேனில் பயணித்த பிரமிளா, தேவி, லோகேஸ்வரன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த கோர விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.