வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: அதிமுக., அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை எனவும், இது நடுநிலை தவறிய செயல் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என, பழனிசாமி அறிவித்தார். அதற்கு போட்டியாக, செந்தில் முருகன் என்பவரை பன்னீர்செல்வம் வேட்பாளராக அறிவித்தார். இதனால், யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. 'நான் கையெழுத்திடும் வேட்பாளருக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில், பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், இடைத்தேர்தலுக்காக மட்டும் ஒரு தீர்ப்பை வழங்கினர். அதாவது, 'இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பதை, அ.தி.மு.க., பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். அதற்காக வேட்பாளர் தேர்வு செய்வதற்கான திட்டத்தை, பொதுக்குழுவில் சுற்றுக்கு விட வேண்டும். 'பொதுக்குழு முடிவை, கட்சி அவைத் தலைவர் தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும். தேர்தல் கமிஷன் அதை ஏற்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
சென்னையில் நேற்று காலை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, மாவட்ட செயலர்கள் வழியாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் அந்த கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது வைத்திலிங்கம் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட தமிழ் மகன் உசேன் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளை அவர் மீறியுள்ளார். யார், யார் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்க வேண்டியது தலையாய கடமை. இதனை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அவர் அனுப்பிய கடிதத்தில், வேட்புமனு தாக்கல் செய்த செந்தில்முருகன் பெயர் இடம்பெறாதது மட்டுமல்ல, வேட்புமனு தாக்கல் செய்யாத தென்னரசு பெயர் மட்டும் அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் அறிவிக்க வேண்டும். ஆனால், தென்னரசுவை அறிவித்தது நடுநிலை தவறிய காரியம். நீதிமன்ற தீர்ப்பை அறவே மீறியது ஆகும்.
வேறு வேட்பாளர் பெயரை முன்மொழியவும், அதற்கான வாய்ப்பும் உருவாக்கப்படவில்லை. இதர வேட்பாளர் போட்டியிடும் உரிமையை தட்டிப்பறிக்க எந்த அதிகாரமும் இல்லை. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. ஒருவரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்து ஆதரிக்கிறீர்களா? இல்லையா என அறிவிப்பது முறையானது அல்ல. தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளார். மேலும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் என்ற பதவியை புறக்கணித்துவிட்டு, பழனிசாமி முகவர் போல் செயல்பட்டுள்ளார்.

அவர் நீதிமன்ற உத்தரவை மீறியது மட்டுமல்ல. ஒரு சாரர் சார்பில் கைப்பாவையாக இயங்கியதை காட்டுகிறது. ஒரு சாரருக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்படுவது, சட்டம் மற்றும் நீதித்துறையை மீறிய செயலாகும். தேர்தல் முறை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும். யாருக்கு ஓட்டு போட்டோம் என்ற ரகசிய உரிமையும் பறிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பிறகு அவர் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில், நாங்கள் போட்டியிடுவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பொதுக்குழு முன்பு வைக்க வேண்டும். அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் அறிவிக்க வேண்டும். தமிழ் மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம். நாங்கள் இப்போதும் இரட்டை இலை சின்னத்திற்கு தான் ஆதரவு அளிக்கிறோம். உச்சநீதிமன்றம் கூறியதை நேர்மையாக நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement