சித்ரதுர்கா,-''வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில், எங்கள் கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர், என கே.ஆர்.பி., எனும் கல்யாண் ராஜ்ய பிரகதி நிறுவனர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
சித்ரதுர்கா, ஹிரியூரில் நேற்று அவர் கூறியதாவது:
ஹிரியூரில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனி கட்சி அறிவித்த நாளில் இருந்தே, பெரும்பாலான மக்கள் என் மீது, அதிக அன்பு காண்பிக்கின்றனர். கே.ஆர்.பி., சார்பில் இங்கு போட்டியிடும் மகேஷ் தலைமையில், பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.
என் வேலையை நான் செய்கிறேன். யாருக்காகவும் நான் காத்திருக்கவில்லை. கடவுள் ஆசியால் மக்கள் என் மீது, அன்பு,நம்பிக்கை வைத்து கட்சிக்கு வருகின்றனர். 25 முதல் 30 தொகுதிகளில், இது போன்று கூட்டம் நடக்கும். ஹிந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு மறந்து, மக்கள் எங்கள் கட்சியில் சேருகின்றனர்.
கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில், வேட்பாளர்களை களமிறக்குவேன். ஸ்ரீராமுலுவுடனான என் நட்பு வேறு. அவர், என்னோடு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்தி வருகிறோம். கங்காவதி தொகுதியில் மட்டும், நான் போட்டியிடுவேன்.என் மனைவி பல்லாரியில் போட்டியிடுவார். மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.