கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளில் பெரும்பான்மையை பெற ஒரு கட்சி 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
ஆட்சியை தக்க வைக்க ஆளும் பா.ஜ.,வும், அக்கட்சிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க டில்லி, பஞ்சாப்பில் காங்கிரஸ், பா.ஜ.,வை புறம் தள்ளி ஆட்சி கட்டிலில் அமர்ந்த ஆம்ஆத்மி கர்நாடகா தேர்தலிலும் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த திட்டம் வகுத்து வருகின்றனர்.
இதனால், தேசிய கட்சிகளான பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் விழிக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம் என அக்கட்சியினரே கூறி வருகின்றனர்.
இது குறித்து ஆம்ஆத்மி தலைவர்கள் கூறியதாவது:
எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை, பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் காப்பி அடிக்கின்றன. டில்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள 'மொஹல்லா கிளினிக்' திட்டத்தை 'நம்ம கிளினிக்' என பா.ஜ.,வும்; 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை காங்கிரசும் காப்பி அடித்துள்ளது. கர்நாடகாவில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி களமிறங்கும். இதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி சர்வேக்களில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கி உள்ளது. ஆனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.
ம.ஜ.த.,வுக்கு 40 இடங்கள் வரை கிடைக்கலாம். ஆம்ஆத்மி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
பஞ்சாப், குஜராத் , கோவா தேர்தலை போல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு உண்டாகலாம். கர்நாடகா தேர்தலை சவாலாக சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -