கர்நாடக மாநிலத்தின் நான்கு திசைகளில் இருந்து ஒரே நாளில் ரத யாத்திரை துவங்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைவிப்பில் மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்த கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த யாத்திரை வரும் ௨௬ ல் கர்நாடகாவின் நான்கு திசைகளில் பா.ஜ., தலைவர்கள் துவக்குகின்றனர்.
பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா சிலை, சாம்ராஜ் நகரில் மகாதேஸ்வரா மலை, பெலகாவியில் சங்கொல்லி ராயண்ணா சிலை, பீதரில் பசவ கல்யாண் அனுபவ மண்டபத்தில் இருந்து யாத்திரைகள் துவங்கும்.
இந்த அனைத்து யாத்திரைகளும் தாவணகரேயில் மார்ச் ௨௩ ல் நிறைவு பெறும். அன்றைய தினம் அங்கு பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படும்.
இந்த யாத்திரைக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், மாநில பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோர் சாரதிகளாக இருப்பர். இவர்களுடன் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள் பங்கேற்பர். யார், யார் எந்த பகுதி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு தலைவருக்கும் குறிப்பிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் நிலவரம், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி, அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தவிர, ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தலுக்காக கட்சியின் பொறுப்பாளர் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -