பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க தேசிய பொது செயலர் சந்தோஷ் வந்து, முன் வரிசையில் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பா வந்தார்.
அவரை பார்த்த சந்தோஷ், பின் வரிசைக்கு சென்று எடியூரப்பாவின் கையை பிடித்து நலன் விசாரித்தார். 'என்னை பார்த்தவுடன் வேறு பக்கம் சென்றது ஏன்' என கேட்டார். அதற்கு எடியூரப்பாவும் சிரித்தபடியே 'அப்படி எல்லாம் இல்லை' என மறுத்தார். சிறிது நேரம் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி பேசி கொண்டிருந்தனர். பின், சந்தோஷ் அவரிடம் விடை பெற்று கொண்டு, தான் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்றார். எடியூரப்பாவும், சந்தோசும் பா.ஜ.,வில் இருந்தாலும் எதிரும், புதிரும் போன்றவர்கள். இவர்கள் இருவரும் கையை பிடித்து கொண்டு பேசியது. அங்கிருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எடியூரப்பா தனது மகன் மற்றும் உறவினர்களுக்கு 'சீட்' கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக பா.ஜ.,வில் ஒரு தகவல் பரவி வருகிறது. எனவே மேலிட தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் சந்தோசுடன் தேர்தல் சீட்டுக்காக நெருக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இது தேர்தல் நேரத்து 'அட்ஜெஸ்ட்மென்ட்' அரசியலா அல்லது ஒன்றிணைந்து செல்வதன் அறிகுறியா என பா.ஜ., தொண்டர்கள் கேட்கின்றனர்.
எடியூரப்பா கையை பிடித்தபடி சந்தோஷ் பேசிக்கொண்டிருந்தார்
- நமது நிருபர் -.