கோவை;மாவட்ட அளவிலான பள்ளி சிறுவர் - சிறுமிகளுக்கான தடகள போட்டியின், சிறுவர் பிரிவில் சாவரா வித்யா பவன் மற்றும் சிறுமியர் பிரிவில், பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பள்ளிகள், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றன.
'தி அமெச்சூர் அத்லெடிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆப் கோயம்புத்துார்' மற்றும் 'ஜி வரதராஜ் நினைவு ஸ்போர்ட்ஸ்' இணைந்து நடத்திய,35வது 'கிட்டீஸ் அத்லெடிக் மீட்' பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், கோவை வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட, 41 பள்ளிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு, 6,8,10 மற்றும் 12 வயது பிரிவுகளில் 50மீ., 60மீ., 80மீ., 100மீ., 200மீ., 300மீ., 600மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், 'சாப்ட் பால்' எறிதல், தடை ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட, பல்வேறு போட்டிகள் நடந்தன.
இதன் சிறுவர் பிரிவில், 42 புள்ளிகள் எடுத்து சாவரா வித்யா பவன் மெட்ரிக்.,மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது. சிறுமியர் பிரிவில், பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பள்ளி அணி, 33 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
தனிநபர் சாம்பியன்ஷிப்
சிறுவர் - 6 வயது பிரிவில், நேரு வித்யாலயா பள்ளியின் சிவகார்த்திகேயன், விமானப்படை பள்ளி போயிரி டாலிவிக் தேஜ், 8 வயது பிரிவில் பி.எஸ்.ஜி., ஆரிக், 10 வயது பிரிவில் சாவரா வித்யா பவன் பரணிதரன், 12 வயது பிரிவில் விமானப்படை பள்ளியின் ரவி பிரகாஷ் யாதவ் ஆகியோர் பெற்றனர்.
சிறுமியர் - 6 வயது பிரிவில், ஜி.கே.டி.,பள்ளி சேஷாஸ்ரீ, பி.எஸ்.ஜி., யோகிதா ஸ்ரீ, 8 வயது பிரிவில், எஸ்.எஸ்.வி.எம்., ஸ்ரவ்யா, 10 வயது பிரிவில் அல்வேர்னியா பள்ளியின் மஞ்சு பார்கவி, 12 வயது பிரிவில், பி.எஸ்.ஜி.ஜி., பள்ளியின் திவ்யதர்ஷினி, ஆல்கேமி பள்ளியின் ஹாசினி ஆகியோர், தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.