கோவை:'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' ஜூனியர் மாணவிகளுக்கான 'வூசூ' போட்டி, முதல் முறையாக கோவையில் நடந்தது.
மத்தியப்பிரதேசம், போபாலில் ஐந்தாவது 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' விளையாட்டு போட்டிகள் ஜன., 30ம் தேதி துவங்கியது. இந்த ஆண்டு, நீர் விளையாட்டு, வாள்வீச்சு, வூசூ உள்ளிட்ட போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, ஜூனியர் மாணவிகளுக்கான 'வூசூ' போட்டி, சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
இப்போட்டியில் வீராங்கனைகளுக்கு 'ஷான்சூ' (சண்டை), 'தவுலுா' (தனிநபர்) என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து, 175 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
சண்டை பிரிவு, 45 கிலோ எடை பிரிவில் ஹரியானாவை சேர்ந்த சோனியா முதலிடம், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, நந்தினி நெகி இரண்டாமிடம்; 48 கிலோ பிரிவில், மணிப்பூரின் சோபா தேவி முதலிடம், உத்திரபிரதேசத்தின் பாயல் இரண்டாமிடம்; 52 கிலோ எடை பிரிவில், ஹரியானாவின் கோமல் முதலிடம், இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) பூமிகா தேவி இரண்டாமிடம்; 56 கிலோ எடை பிரிவில், ஹரியானாவின் தீபிகா முதலிடம், மணிப்பூர் மாநிலத்தின் அபினவ் தேவி இரண்டாமிடம்; 60 கிலோ எடை பிரிவில், ஹரியானாவின் ஹிமன்ஷி முதலிடம், கர்நாடகாவின் பைசா இரண்டாமிடம் பிடித்தனர்.