பெங்களூரு,-கர்நாடக சட்டசபை தேர்தலை நடத்த, 500 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என தேர்தல் கமிஷன் மதிப்பிட்டுள்ளது.
கர்நாடக சட்டசபைக்கான பதவிகாலம், மூன்று மாதங்களில் முடிவடைய உள்ளது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் செலவு இரட்டிப்பாகிறது. 2013 சட்டசபை தேர்தலுக்கு, 160 கோடி ரூபாய் செலவானது. 2018ல் 250 கோடி ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், மின்னணு ஓட்டு இயந்திரம், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை கண்டறியும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதனால், தேர்தல் செலவு 394 கோடி ரூபாயாக உயர்ந்தது.
ரூ.500 கோடி
பண வீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றால், இம்முறை, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா இரண்டு கோடி ரூபாய் என 224 தொகுதிகளுக்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல் நிதி தேவைப்படும் என கமிஷன் மதிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக, ஏற்கனவே, 300 கோடி ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, அடுத்த நிதியாண்டில் வழங்கப்படும். இது தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
என்னென்ன செலவு?
வாக்காளர் பட்டியல் தயாரித்தல், அச்சிடுதல், விழிப்புணர்வு அட்டைகள் அச்சிடுதல், தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி, பணிக்கொடை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் கொண்டு செல்லுதல், சோதனை சாவடி அமைத்தல், ஓட்டுச்சாவடி, வலுவான அறை, ஓட்டு எண்ணும் மையங்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு செலவழிக்கப்படுகின்றன.
எதற்கு அதிகம்
தேர்தலுக்கு செய்யப்படும் மொத்த செலவில், பெரும்பகுதி பாதுகாப்பு செலவு, உணவு, தண்ணீர் செலவுகளுக்கு செல்கிறது. மாநில போலீஸ் துறைக்கான பாதுகாப்புக்கு 100 முதல் 150 கோடி ரூபாய்; மத்திய பாதுகாப்பு படைகளின் செலவை, மத்திய அரசு ஏற்கும்.
வாகன சோதனை மையம், ஓட்டு எண்ணும் மையங்கள் அமைத்தல், பாதுகாப்பு அறை கட்டுதல் போன்றவைகளுக்கு செலவழிக்கப்படும், என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், ஓட்டுச்சாவடி எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதற்கு ஏற்றபடி செலவு தொகையும் அதிகரிக்கும்.
மனோஜ் குமார் மீனா,
மாநில தலைமை தேர்தல் அதிகாரி