மடிவாளா,--சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை ஆசை காட்டி பலாத்காரம் செய்ததாக இளம்பெண் புகார் அளித்தார். சாப்ட்வேர் இன்ஜினியரின் மொபைல் போனில் 208 நிர்வாண வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
டில்லியை சேர்ந்த பிரசாத், 30 என்பவர், மடிவாளாவில் வசித்து வருகிறார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பலாத்காரம் செய்து விட்டார் என கூறி இளம்பெண், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், பிரசாத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
கைது செய்யப்பட்ட பிரசாத், இன்ஸ்டிராகிராமில் இளம்பெண் பெயரில் போலியாக கணக்கு துவங்கி, வேலை வாங்கித் தருவதாக பலருக்கும் வலை விரிப்பார். இதில் அறிமுகமாகும் பெண்களுடன் 'சாட்டிங்' செய்து, வீடியோ காலில் பேசுவார். வேலையை எதிர்பார்க்கும் பெண்களிடம், அலுவலகத்தில் இருப்போருக்கு ஒத்துழைத்தால்தான் கிடைக்கும்.
நானும் நல்ல வேலையில் இருக்கிறேன் என கூறி, பாலியல் உறவுக்கு துாண்டுவார். இளம் பெண்களிடம் வீடியோ காலில் நைசாக பேசி, அவர்களின் நிர்வாண வீடியோக்களை பெற்று கொள்வார். பின் ஆபாச வீடியோக்களை அனுப்பி, அதுபோல உறவு கொண்டு எனக்கு அனுப்பி வைக்கவும் என கூறுவார். தன் ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லை என்றால், சமூக வலைதளத்தில் நிர்வாண வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டுவார்.
இதுபோல மொத்தம் ஆறு பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் 208 பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது. இவரிடம் போலீசார் மேலும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.