தாவணகரே,-'போக்சோ' வழக்கை முடித்து வைப்பதாக கூறி, லஞ்சம் வாங்கிய பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்.
தாவணகரே டவுன் பி.ஜே., பார்க் பகுதியில், வசித்து வருபவர் மதன். இவர் 'போக்சோ' வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அவர் மீதான வழக்கு தாவணகரே நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில் மதனுக்கு, அரசு சிறப்பு வக்கீலான ரேகா கோட்ரேகவுடா, 45, என்பவரின் பழக்கம் கிடைத்தது. மதனிடம், 'உங்கள் மீது பதிவான போக்சோ வழக்கை, நான் முடித்து வைக்கிறேன். இதற்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும்' என்று கேட்டார்.
ஒப்புகொண்ட மதன், முதல் தவணையாக 1.13 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால் மேற்கொண்டு லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், ரேகா மீது தாவணகரே லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார். அப்போது அவருக்கு சில அறிவுரைகள் வழங்கிய போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று ரேகாவை அவரது அலுவலகத்தில் சந்தித்த மதன், மீதம் கொடுக்க வேண்டிய 1.87 லட்சம் ரூபாயை கொடுத்தார். அதை ரேகா வாங்கினார். அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், ரேகாவை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த 1.87 லட்சம் ரூபாய், வெற்று காசோலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.