கோவை:கோவை மாவட்டத்தின், 183ம் கலெக்டராக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கிராந்தி குமார் பாடி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முந்தைய கலெக்டர் சமீரன், புதிய கலெக்டரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய கலெக்டருக்கு, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன்,கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோகிலா, சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்துள்ளார். பி.காம்., பட்டதாரியான அவர், சார்ட்டட் அக்கவுன்டன்ட் தேர்ச்சி பெற்றவர்.
2015ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற கிராந்தி குமார் பாடி, திருச்சியில் பயிற்சி அதிகாரியாகவும், டில்லி தபால் துறையில் உதவி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
நாமக்கல் சப்கலெக்டராகவும், வணிக வரித்துறையில் ஈரோடு கோட்ட இணை கமிஷனராகவும், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலராகவும் பணியாற்றினார். கோவை கலெக்டராக நியமிக்கப்படுவதற்கு முன், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் கிராந்தி குமார் பாடி, ''மக்கள் குறைகளை தீர்ப்பதற்கும், உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கும் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து துறைகளில் இருக்கும், முதன்மை திட்டங்களை செயல்படுத்துவது பற்றி முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். களத்துக்கு சென்று பணியாற்றி, அரசு திட்டங்களின் பயன்களை பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.