பெங்களூரு,-எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில் எஸ்.ஐ., ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகத்தில் 545 இடங்களுக்கு நடந்த எஸ்.ஐ., தேர்வில், முறைகேடு நடந்தது. சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் நிலைய எஸ்.ஐ., ஹரிசும், 29. கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் ஜாமின் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செயதிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம், நீதிபதி உமா முன்னிலையில் நடந்தது.
மனுதாரர் சார்பில், ஆஜரான வக்கீல் வாதாடுகையில், 'இந்த வழக்கில் எனது மனுதாரர் பொய்யாக, சிக்க வைக்கப்பட்டு உள்ளார்.
'அரசு ஊழியர் என்பதால் எனது மனுதாரர் தலைமறைவாகும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்,' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசன்ன குமார், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'மனுதாரர் ஹரிஷ், எஸ்.ஐ., தேர்வு எழுதிய இருவரிடம் இருந்து தலா 30 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார். இதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. இதனால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது,' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உமா, 'சமூகத்தில் உயர் பதவி வகித்த மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால், அவர் விசாரணையை தடம் புரள செய்யும் வாய்ப்பு உள்ளது.
'அவரை ஜாமினில் விடுவிப்பது, சமுதாயத்திற்கு தவறான தகவலை கொடுப்பது போன்றது. நீதித்துறையின் நம்பகத்தன்மையை பாதிக்கும். அவருக்கு ஜாமின் நிராகரிக்கப்படுகிறது,' என கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.