கோவை:கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில், மொத்தம் 9,500 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்
தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி, 2022-2023ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பானது, நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என, இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது, ஜனவரி, 28 மற்றும் 29 ம் தேதிகளிலும். நிலப்பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் 4,5 தேதிகளில் நடத்தப்படுகிறது.
கோவையை பொறுத்தவரை, நீர் பறவைகளுக்கென, வாளையார், செம்மேடு உக்குளம், பேரூர், உக்கடம், குறிச்சி, செங்குளம், கிருஷ்ணாம்பதி, வெள்ளலுார், சிங்காநல்லுார், பள்ளிபாளையம், கண்ணம்பாளையம், ஆச்சான்குளம், சூலுார், பெத்திக்குட்டை, செல்வம்பதி, நரசம்பதி, இருகூர் குளம், வேடப்பட்டி, காளப்பட்டி என 20 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு, கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இதில்,பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், வனத்துறை பணியாளர்கள் என 5 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.
இந்த கணக்கெடுப்பில், சராசரியாக 55 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன. மொத்தமாக, 9,500 பறவைகள் பார்த்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கிளி, கழுகு, வாத்து, ஹார்ன்பில், பஞ்சுருட்டான், காமன் டெர்ன், மீன்கொத்தி, நாரை வகைகள், துாக்கணாங் குருவி என பல வகையான பறவைகள் பார்த்துள்ளனர். அதிகபட்சமாக, பெத்திக்குட்டை பகுதியில், 89 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் அரிய வகை பறவை இனங்களில், வாளையார் பகுதியில், 'கிரே ஹார்ன்பில்' எனப்படும், சாம்பல் நிற இருவாச்சியும், பெத்திக்குட்டையில் ஆஸ்ப்ரே கழுகு வகையும் கண்டறியப்பட்டன' என்றனர்.
பறவை கணக்கெடுப்பிலேயே மிகவும் குறைவான பறவைகள் கண்ட இடம் உக்கடம் குளம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாலும். மக்கள் நடமாட்டம், வாகன சத்தம் இது எல்லாவற்றையும் விட, பறவைகளுக்கான வாழ்விடம் குறைந்ததாலும், பறவைகளின் வரத்தும் குறைந்துவிட்டது.