பெங்களூரு,-நோய் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்தாததால், பெங்களூருவில் 4 மாதத்தில் 85 தெருநாய்கள் செத்து போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், நோய் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்தாததால், 4 மாதங்களில் 85 தெருநாய்கள் இறந்து போனதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் வசித்து வரும் தெருநாய்கள் பராமரிப்பு ஆர்வலர் நேவினா காமத் கூறியதாவது:
பெங்களூரு தெற்கு பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நெருநாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்று, கருத்தடை அறுவை சிகிச்சை செய்கின்றனர். பின்னர் அந்த நாய்களை சாலையில், விட்டு செல்கின்றனர். அதன்பின்னர் நாய்களின் நிலை என்ன என்பதை பார்க்கவில்லை.
கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பின்பு, நோய் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்தாததால், 2022 ம் ஆண்டு அக்டோபர் முதல், இதுவரை 85 தெருநாய்கள் இறந்து உள்ளன. இதற்கு மாநகராட்சியின் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர், ஹள்ளி சிவராமின் அலட்சியமே காரணம்.
விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் தான், 85 தெருநாய்கள் இறந்து விட்டன. நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கையை, மாநகராட்சி அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் தெருநாய்கள் இறந்த விவகாரம் குறித்து, போலீசிலும் புகார் செய்துள்ளார். இதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தன் மீது நேவினா கூறிய புகாருக்கு, ஹள்ளி சிவராம் பதில் அளிக்கையில், ''நான் கர்நாடக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில், பணியாற்றி வருகிறேன். தடுப்பூசி செலுத்தாததால் தெருநாய்கள் இறந்ததற்கு, நான் பொறுப்பாக முடியாது. அதற்கு மாநகராட்சி தான் பொறுப்பு. தெருநாய்கள் இறந்தது பற்றி எனக்கு தெரியாது,'' என்றார்.