சுகாதார சீர்கேடு
பி.என்.பாளையம், வேணுகோபால் லேன், அய்யாசாமி கோவில் வீதியில், குடியிருப்புக்கு நடுவே கட்டட கழிவு மலைபோல் குவிந்துள்ளது. இதனால், விஷ ஜந்துகள் வீட்டுக்குள் வருவதுடன், சுகாதாரமற்ற சூழலும் நிலவுகிறது.
- பொதுமக்கள், அய்யாசாமி கோவில் வீதி.
சேதமடைந்த மின்கம்பம்
சாய்பாபாகாலனி, என்.எஸ்.ஆர்.ரோடு, 'எஸ் பெண்ட்' அருகில் மின்கம்பம் மோசமாக பழுதடைந்துள்ளது. சாய்ந்த நிலையில் இருக்கும் கம்பத்தை, உடனடியாக மாற்ற வேண்டும்.
- குமார், சாய்பாபாகாலனி.
சாலையை விரிவாக்கணும்
பாலக்காடு ரோடு, மரப்பாலம் பகுதியில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால், காலை மற்றும் மாலை வேளையில், அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
- விஜய், மரப்பாலம்.
வாகன ஓட்டிகள் அவதி
சங்கனுார் ரயில்வே கேட் அருகே, வாகனங்கள் செல்வதற்கான 'ரயில்வே லைன்', மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. வாகனஓட்டிகள் சாலையை கடக்க, மிகவும் சிரமப்படுகின்றனர்.
- மனோகரன், சங்கனுார்.
பயணிகள் அவதி
வெள்ளலுாரில், தடம் எண் 74 பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வழித்தடத்தில், பேருந்தை இயக்குவதில்லை. மாறாக, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே, பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.
- மணி, வெள்ளலுார்.
அடிக்கடி விபத்து
புலியகுளம் முதல் ரேஸ்கோர்ஸ் சாலையை இணைக்கும், ரெட்பீல்டு சாலையில், கடைக்காரர்களால் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் சாலையில் நடப்பதால், அடிக்கடி விபத்தும் நடக்கிறது.
- சேகர், புலியகுளம்.
சாலையில் ஓடும் சாக்கடை
பேரூர் மெயின் ரோடு, தெலுங்குபாளையம் பிரிவில், அடிக்கடி சாக்கடை அடைத்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பாதிப்படைகின்றனர்.
- பாலாஜி, பேரூர்.
91வது வார்டில் கும்மிருட்டு
கோவைப்புதுார், பேரூர் பைபாஸ் ரோடு, 91வது வார்டு, புவனா பேலஸ் அபார்ட்மென்ட் எதிரே தெருவிளக்குகள் எரிவதில்லை. பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- பாலாஜி, கோவைப்புதுார்.
காய்ச்சல் பாதிப்பு
உப்பிலிபாளையம், இந்திரா கார்டன், ஆறாவது வீதியில், குடியிருப்புக்கு நடுவே தேங்கி நிற்கும் கழிவுநீரில், கொசுப்பெருக்கம் அதிகமாக உள்ளது. இதனால், குழந்தைகள் அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
- சக்திவேல், உப்பிலிபாளையம்.