பெங்களூரு,-சர்வதேச விமான கண்காட்சியை ஒட்டி, கண்காட்சி நடக்கும் இடத்தை சுற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்த அசைவ ஹோட்டல்களை திறக்க பெங்களூரு மாநகராட்சி, நிபந்தனையுடன் அனுமதி அளித்து உள்ளது.
பெங்களூரு எலஹங்கா விமானப்படை பயிற்சி மையத்தில், வரும் 13ம் தேதி முதல் 17 ம் தேதி வரை சர்வதேச விமான கண்காட்சி நடக்கிறது.
இதையொட்டி, இம்மையத்தை சுற்றிலும் 10 கி.மீ., சுற்றளவுக்கு ஜன., 30 முதல் பிப்., 20ம் தேதி வரை அசைவ ஹோட்டல்கள் திறக்கவும், இறைச்சி விற்பனை செய்யவும், பெங்களூரு மாநகராட்சி தடை விதித்திருந்தது.
இந்த உத்தரவு வெளியானதையடுத்து, எலஹங்கா பகுதியை சேர்ந்த அசைவ ஹோட்டல்கள் நிர்வாகத்தினர், தங்கள் ஹோட்டல்களை திறக்க அனுமதிக்க, மாநகராட்சி மண்டல கமிஷனரிடம் கோரினர்.
இதையடுத்து, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
எலஹங்கா விமானப்படை பயிற்சி மையத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள பல்வேறு அசைவ ஹோட்டல்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு உருவாகும் அசைவ கழிவுகளை விஞ்ஞான ரீதியில் அப்புறப்படுத்த வேண்டும்.
அசைவு கழிவுகளை ஆங்காங்கே வீசினால், அதை சாப்பிட வரும் பறவைகள் பறப்பதால், விமான கண்காட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.