கோவை:ரத்தினபுரியில் சைக்கிள் திருடிய சிறுவர்கள் மூவர், அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
ரத்தினபுரி சின்னத்தம்பி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்; டீக்கடை நடத்தி வருகிறார். பள்ளிக்கு செல்லும் இவரது மகள், சைக்கிளை வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.
அந்த சைக்கிளை, மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டதாக புகார் அளித்தார். சிசிடிவி காட்சிப்பதிவுகள் அடிப்படையில் விசாரித்தபோது, சிறுவர்கள் மூவர், சைக்கிளை திருடிச்செல்வது தெரியவந்தது.
சுற்று வட்டாரப்பகுதிகளில், இரவு நேர சிசிடிவி காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட அதே சிறுவர்கள், சந்தேகத்துக்கு உரிய வகையில் நடமாடுவதும் தெரியவந்தது.
வெவ்வேறு இடங்களில் இந்த சிறுவர்கள், சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், சிறுவர்கள் என்பதால் மன்னித்து விடப்பட்டதையும், விசாரணையில் போலீசார் கண்டறிந்தனர்.
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மூன்று சிறுவர்களும், தவறான செயல்களில் ஈடுபட்டிருப்பதை, அவர்களது பெற்றோரும் ஒப்புக்கொண்டனர்.
சிறுவர்கள் மூவரும், அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். வழக்கை சிறப்பு எஸ்.ஐ., நல்லதம்பி விசாரிக்கிறார்.