ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு பெறும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அ.தி.மு.க.,வேட்பாளர் தேர்வுக்கு, அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், 'அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்து, சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளார்' என, பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றம் சாட்டி உள்ளதால், மீண்டும் குழப்பம்ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்தை தீர்த்து, பொதுவான வேட்பாளருடன், அ.தி.மு.க., கரை காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, காங்கிரசைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா., மறைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான மனு தாக்கல் ஜன., 31ல் துவங்கியது. காங்., சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.,வின் தந்தையுமான இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க., பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, பன்னீர்செல்வம் அணி சார்பில், செந்தில்முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
தே.மு.தி.க., - -நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. சிறிய கட்சியினரும், ஏராளமான சுயேச்சைகளும், ஆர்வமுடன் களத்தில் குதித்து உள்ளனர். வேட்பு மனுதாக்கல் நாளை மாலை 5:00 மணியுடன் நிறைவு பெறுகிறது.
கோர்ட் உத்தரவு
இதற்கிடையில், இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வின் சின்னமான, 'இரட்டை இலை' யாருக்கு என்ற கேள்வி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் மத்தியில் எழுந்தது; விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
'இடைத் தேர்தலுக்காக மட்டும், அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்; பொதுக்குழு முடிவை, தேர்தல் கமிஷனுக்கு அவைத்தலைவர் அனுப்ப வேண்டும்; தேர்தல் கமிஷன் அதை ஏற்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அ.தி.மு.க.,வில் உள்ள இரு தரப்பையும் சேர்ந்த, 2,750 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, பொதுக்குழு வேட்பாளர் தேர்வு ஒப்புதல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
பொதுக்குழு உறுப்பினர்களும், உறுப்பினர் அட்டை, 'ஆதார்' கார்டு ஆகியவற்றின் நகலை இணைத்து, வேட்பாளர் தேர்வுக்கான கையெழுத்திட்ட கடிதத்தை, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் நேற்று வழங்கினர்.
இந்த கடிதங்கள் நேற்று இரவு, ஆன்லைன் வாயிலாக, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சட்ட விரோதம்?
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பின், அவர்கள் அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, வேட்பாளரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதம், அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது.
யார் யார் போட்டியிடுகின்றனர் என அறிவிக்க வேண்டியது தலையாய கடமை. இதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழ் மகன் உசேன் அனுப்பிய கடிதத்தில், வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில்முருகன் பெயர் இடம் பெறவில்லை; வேட்புமனு தாக்கல் செய்யாத தென்னரசின் பெயரை மட்டும், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்துள்ளார்.
யார் வேட்பாளர் என்பதை பொதுக்குழு தான் அறிவிக்க வேண்டும். ஆனால், தென்னரசை அறிவித்தது, நீதிமன்ற தீர்ப்பை மீறிய செயல்.
பழனிசாமி ஏஜென்ட்
வேறு வேட்பாளர் பெயரை முன்மொழிய வாய்ப்பை உருவாக்கவில்லை. ஒருவரை மட்டும் வேட்பாளராக அறிவித்து, ஆதரிக்கிறீர்களா; இல்லையா என கேட்பது முறையானது அல்ல. பழனிசாமியின் ஏஜென்டாக தமிழ்மகன் உசேன் செயல்பட்டுள்ளார்.
தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும். யாருக்கு ஓட்டு போட்டோம் என்ற ரகசிய உரிமையும் பறிக்கப்பட்டு உள்ளது. மற்ற வேட்பாளர்கள் போட்டியிடும் உரிமையை, தட்டிப் பறிக்கும் அதிகாரம் தமிழ்மகன் உசேனுக்கு இல்லை.
நாங்கள் போட்டியிடுவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் அறிவிக்க வேண்டும். நாங்கள் இப்போதும் இரட்டை இலை சின்னத்திற்கு தான் ஆதரவு அளிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னாள் எம்.பி.,யும், பொதுக்குழு உறுப்பினருமான டாக்டர் மைத்ரேயன் வெளியிட்ட அறிக்கையில், 'நான் பொதுக்குழு உறுப்பினர். நேற்று மாலை வரை, எனக்கு எந்த சுற்றறிக்கையும் வரவில்லை' என்று கூறியுள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர்களிடம் கடிதம் வாங்கியது சட்ட விதி மீறல் என, பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேநேரத்தில், தங்கள் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்தும், எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளனர்.
ஆனால், 'இரட்டை இலை சின்னத்திற்குத்தான் ஆதரவு' என்று கூறியுள்ளனர். இது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
வேட்பு மனு தாக்கல் நாளை முடிவடையும் நிலையில், அதற்குள் இந்த சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து, அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா; அ.தி.மு.க., கரை சேருமா என்பதெல்லாம், பன்னீர் தரப்பு புகாரில், தேர்தல் கமிஷன் எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்தே முடிவாகும்.
அ.தி.மு.க., பன்னீர்செல்வம் தரப்பில் வெளியான அறிக்கை:உச்ச நீதிமன்ற தீர்ப்பு நல் உள்ளத்தோடு, நடுநிலை உணர்வுடன் வழங்கப்பட்டு இருந்தாலும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அதை செயல்படுத்திய முறை, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அவர் நடுநிலை தவறி, ஒருசாராரின் கைப்பாவையாகவே இயங்கி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
சட்டம் வெறுமனே செயல்படுத்தப்படுவது மட்டுமல்ல; அதற்கென உள்ள நெறிமுறையின்படி செயல்படுத்தப்பட வேண்டும். நெறிமுறை தவறி ஒரு சாராருக்காக, ஒரு தலைபட்சமாக நடத்தப்படுவதை, சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயலாக பொதுக்குழு உறுப்பினர்கள் கருதுகின்றனர்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -