பொன்னேரி,--மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கடபுரம், உப்பரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 150க்கும் அதிகமான தெருக்கள் உள்ளன.
இங்கு மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் குறைந்த வாட்ஸ் திறன் கொண்டதாக உள்ளன. ஒவ்வொரு மின் கம்பத்திலும், 9 வாட்ஸ் திறன் கொண்ட பல்புகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இவற்றில் இருந்து கிடைக்கும் வெளிச்சம் போதுமானதாக இல்லை.
இதனால் சாலைகளில் தெருவிளக்குகள் இருந்தும் பயனின்றி கிடக்கிறது.
இரவு நேரங்களில் தெருச்சாலைகளில் பயணிக்கும் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது குறித்து குடியிருப்புவாசிகள் தெரிவித்ததாவது:
கம்பங்களில் உள்ள குறைந்த வாட்ஸ் திறன் பல்புகளின் வெளிச்சம் சாலை முழுதும் கிடைப்பதில்லை.
வீடுகளில் சிறு அறைகளுக்கு பயன்படுத்தும் பல்புகளை தெருவிளக்குகளுக்கு போடப்பட்டு உள்ளது.
சில தினங்களாக இப்பகுதியில், இரவு நேரங்களில் திருடர்கள் நடமாட்டம் உள்ளது.
தற்போது தெருவிளக்குகளில் இருந்து கிடைக்கும் குறைந்த வெளிச்சம், திருடர்களுக்கு சாதகமாக உள்ளது. வீடுகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
தெருவிளக்குகளின் வெளிச்சம் குறைவால், திருடர்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
கடந்த காலங்களில், தெருவிளக்குகளுக்கு, 20 வாட்ஸ் திறன் கொண்ட பல்புகள் பயன்படுத்தப்பட்டன. அதுபோன்ற பல்புகளை மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.