வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவின் எட்டாம் நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், மருதமலை முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இக்கோவிலில், கடந்த ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன், தைப்பூச தேர் திருவிழா துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இந்நிலையில், தைப்பூச திருவிழா முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் கோலாகலமாக நேற்றுமுன்தினம் நடந்தது.
தைப்பூச திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று, அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி, தங்க காசு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், ஆடுமயில் வாகனத்தில் திருவீதியுலா வந்தனர். தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, பொன்னூஞ்சலும், இரவு 7:30 மணிக்கு, தெப்பத்திருவிழாவும் நடந்தது.
இந்நிலையில், தை மாத பூச நட்சத்திரம், நேற்றுமுன்தினம் காலை துவங்கி, நேற்று பகல் வரை இருந்தது. இதனால் தைப்பூசத்தையொட்டி, நேற்றுமுன்தினம் இரவு முதலே, மருதமலைக்கு பக்தர்கள், பால்குடம் மற்றும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால், மருதமலை முழுவதும் பக்தர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பஸ் ஏறும் இடம் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் இடங்களில், நீண்ட வரிசையில் பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்தனர்.
அடிவாரம் முதல் வடவள்ளி வரை, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், காந்திபுரத்திலிருந்து வாகனங்களை, வடவள்ளி- தொண்டாமுத்தூர் ரோடு, கல்வீரம்பாளையம் வழியாக, மருதமலைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
திடீரென, போக்குவரத்தில் மாற்றம் செய்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.