கோவை:விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், பணிநிரவல் பட்டியல் தயாரிக்கப்பட்டதால், பகுதிநேர ஓவிய ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் மாலை துவங்கி, இரவு வரை நடந்தது.
தமிழகம் முழுக்க, அரசுப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேர கலையாசிரியர்களுக்கான, பணிமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
ஓவிய ஆசிரியர்களுக்கு, பணிநிரவல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. மாவட்டத்திற்குள், வெளி மாவட்டத்திற்கான பணிநிரவலுக்கு தகுதியானோர் பட்டியல், கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டது.
விதிமுறைகள் படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 100 மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், ஒரு பகுதிநேர ஆசிரியர் நியமிக்கப்படுவர்.
இதற்கு குறைவாக இருந்தால், வேறு பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்படுவர். ஆனால், மாணவர் எண்ணிக்கை, 200க்கும் மேல் இருந்தும், சில ஆசிரியர்கள், பணிநிரவல் பட்டியலில் இடம்பெற்றதாக, புகார் எழுந்துள்ளது.
எமிஸ் இணையதள தகவல்படி, மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில், குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு துவங்க வேண்டிய கலந்தாய்வு மாலை, 6:45 மணிக்கு ஆரம்பித்து இரவு, 8:45 மணிக்கு நிறைவடைந்தது.
கோவை மாவட்டத்தில், ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, பணிநிரவல் கலந்தாய்வுக்கு மூன்று பேர் அழைக்கப்பட்டனர்.
இதில் இருவர், விதிமுறைகளுக்கு மீறி பட்டியலில் இடம்பெற்றது தெரியவந்ததால், பழைய பள்ளியிலே பணியை தொடர அனுமதிக்கப்பட்டது.
ஒருவர் மட்டும் பணிநிரவல் செய்யப்பட்டார். 12 பேர் மாவட்டத்திற்குள் இடமாறுதல் பெற்றனர். வெளி மாவட்டங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு, இன்று (பிப்.,6ம் தேதி) நடக்கிறது.
ஆனால், தையல், இசை, விளையாட்டு உள்ளிட்ட, பிற கலைப்பாடங்களுக்கான கலந்தாய்வு, அறிவிக்கப்படவே இல்லை.
அடுத்தடுத்த கலந்தாய்வுக்கு, பணிநிரவல் பட்டியல் வெளியிடும் முன்பே, விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதை, உறுதி செய்ய வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.