திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் 3.5 கோடி ரூபாய் செலவில், 14 இடங்களில் நடக்கும் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இவை, இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில், வரும் 2030ம் ஆண்டுக்குள் ஏழை, எளியோருக்கு இலவச மருத்துவ சேவைகளை உறுதி செய்யும் விதமாக, கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப் போல், நகர்ப்புறங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில், நகர்ப்புற சுகாதார மற்றும் நல வாழ்வு மையங்கள் கட்ட, தலா 25 லட்சம் ரூபாய்ஒதுக்கப்பட்டது.
மாநிலம் முழுதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முதற்கட்டமாக, 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இந்த மருத்துவ நிலையங்களுக்காக 108.45 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டும் பணிகள் நடக்கின்றன.
இதன் வாயிலாக பொதுமக்கள் அனைத்து விதமான முதற்கட்ட மருத்துவ ஆலோசனைகளையும், தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
மேல் சிகிச்சை தேவைப்பட்டால் ஒழிய, 2 கி.மீ., துாரத்துக்கு மேல் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டிய கட்டாயம் இருக்காது.
அதேபோல், பொதுமக்கள் தற்போது அமைக்கப்பட்டு வரும் எந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்திலும் மருத்துவ ஆலோசனைகள் பெறலாம்.
குறிப்பாக, கர்ப்பிணியர் கர்ப்பக் கால பரிசோதனைகள், குழந்தைகள் நலன், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் அருகில் உள்ள நலவாழ்வு மையத்தை அணுகி, முதற்கட்ட மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
மாநிலம் முழுதும், 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில், ஒரே நேரத்தில் இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, இந்த மாத இறுதிக்குள் முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில், 14 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் 3.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஓரிரு இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன.
ஆவடி மாநகராட்சி பொறுத்தவரை 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு, ஒரு அரசு நகர்ப்புற சுகாதார நிலையம் என்ற எண்ணிக்கையில், ஏற்கனவே ஏழு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இனி, ஒவ்வொரு அரசு நகர்ப்புற சுகாதார நிலையத்தின் கீழ் தலா இரண்டு நலவாழ்வு மையங்கள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர், ஒரு உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தினமும் காலை 8:00 மணி முதல் பகல் 11:00 வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை என, இரு வேளைகளிலும் புற நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புற நல வாழ்வு மையத்தில், முதற்கட்ட மருத்துவ ஆலோசனைகள் மட்டுமின்றி, பயிற்சியாளர் வாயிலாக, பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணியருக்கு யோகா பயிற்சியும் தரப்படும். அதேபோல், முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு பரிந்துரை செய்து, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்படுவர்.
- மருத்துவர் ம.யாழினி, நல அலுவலர், ஆவடி மாநகராட்சி.
கடந்த 30 ஆண்டுகளாக பட்டாபிராம் பகுதி மக்கள், அரசு மருத்துவமனை வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது இரண்டு நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பயன்பாட்டிற்கு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் பட்டாபிராமில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நெமிலிச்சேரி, பாலவேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பல கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனை அமைத்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
- தி.சடகோபன், சமூக ஆர்வலர், பட்டாபிராம்.
1 ஆவடி ரோஜா தெரு, பூம்பொழில் நகர், கோவில்பதாகை2 ஆவடி வள்ளுவர் தெரு, கோவில்பதாகை3 ஆவடி கவரப்பாளையம் பிரதான சாலை4 ஆவடி பள்ளிக்கூட தெரு, விழிஞ்சியம்பாக்கம்5 ஆவடி பள்ளத்தெரு, சேக்காடு6 ஆவடி ஆனந்தா நகர், பாலேரிப்பட்டு7 ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, செக்டார் - 18 ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, செக்டார் - 29 அண்ணனுார் பிள்ளையார் கோவில் தெரு, கணபதி நகர்10 திருமுல்லைவாயில் திருமுல்லைவாயில் காலனி11 திருமுல்லைவாயில் நேதாஜி தெரு, பெரியார் நகர்12 மிட்னமல்லி கம்மாளர் தெரு13 பட்டாபிராம் ஐ.ஏ.எப்., சாலை, உழைப்பாளர் நகர்14 பட்டாபிராம் பால வினாயகர் கோவில் தெரு, சாஸ்திரி நகர்.
-- நமது நிருபர் -