கோயம்பேடு,--கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பயணியர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தைப்பூசம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் மற்றும் வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக, ஏராளமான பயணியர், நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.
இரவு நீண்ட நேரமாகியும் திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பயணியர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் வெளியூர் பேருந்துகள் செல்லும் பகுதியில் ஒன்று திரண்டு, பேருந்துகளை உள்ளே செல்ல விடாமல் வழிமறித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட பயணியரிடம் பேச்சு நடத்தினர்.
ஒரு கட்டத்தில் பேச்சு, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமாக முற்றியது.
பின், ஒரு வழியாக மாற்று பேருந்துகள் இயக்கப்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து, பயணியர் கலைந்து சென்று பேருந்துகளில் பயணித்தனர்.
வெளியூர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாதது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.