தொண்டாமுத்தூர்;வேடபட்டியை சேர்ந்தவர் மரிய ஜான்சன். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஜார்ஜ் டேனியல், 13, கேரல்,6 என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் ஜார்ஜ் டேனியல், சுண்டப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை தினமான நேற்று, மரிய ஜான்சன், தனது இரு மகன்களையும் அழைத்து கொண்டு, வேடபட்டி புதுகுளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்போது, இளைய மகன் கேரல் கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். தம்பியை மீட்க, ஜார்ஜ் டேனியல் குளத்திற்குள் குதித்துள்ளார். அப்போது, ஜார்ஜ் டேனியலும் நீருக்குள் மூழ்கினார்.
உடனடியாக தந்தை மரிய ஜான்சன், நீரில் மூழ்கிய இரு மகன்களையும் மீட்டார். அப்போது, மூத்த மகன் ஜார்ஜ் டேனியல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அவ்வழியாக சென்றவர்களின் உதவியுடன், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.