கடம்பத்துார்,--கடம்பத்துார் பகுதியில் அரசு பேருந்துகள் இயங்காததால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் பகுதியிலிருந்து, கடம்பத்துார், பேரம்பாக்கம், மப்பேடு, சுங்குவார்சத்திரம் வழியே, காஞ்சிபுரத்திற்கு தடம் எண் 160 என்ற அரசு பேருந்து திருவள்ளூர் - பேரம்பாக்கம் வரையிலும் இயக்கப்பட்டு வந்தது.
இந்த பேருந்தை நம்பி, தினமும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என, 500க்கும் மேற்பட்ட பயணியர் பயணம் செய்து வந்தனர்.
இந்த பேருந்து முறையாக இயக்கப்படாமல் பிற இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
இதனால், தனியார் பேருந்துகளிலும் 'ஷேர் ஆட்டோ'க்களிலும் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், கடம்பத்துார் வழியாக, தடம் எண் 160 என்ற அரசு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்த்துள்ளனர்.