பூந்தமல்லி,--பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டில், லட்சுமிபுரம் பிரதான சாலை உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் இங்கு அமைக்கப்பட்ட சாலை, தற்போது ஆங்காங்கே பொத்தல் விழுந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது.
கண்டுகொள்ளவில்லை
இந்த சாலையானது, மாங்காடு மற்றும் நசரத்பேட்டை பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாகும். மேலும், 200க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரு வணிக நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன், சாலை செப்பனிட ஜல்லிகள் கொட்டப்பட்டன. ஆனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த நகரசபை கூட்டத்தில், கோரிக்கை வைத்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
நடவடிக்கை இல்லை
மாங்காடு - நசரத்பேட்டையை இணைக்கும் லட்சுமிபுரம் சாலையை சீரமைக்க, இங்கு ஜல்லிகள் கொட்டி மூன்று மாதத்திற்கும் மேலாகிறது.
ஆனால், சாலை அமைக்க நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தினமும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.