திருவள்ளூர்-திருவள்ளூர் நகராட்சி பகுதியை ஒட்டி, ராஜாஜிபுரம், பூங்கா நகர் உள்ளது. இதில், ராஜாஜிபுரம் நகராட்சி பகுதியிலும், பூங்கா நகர் காக்களூர் ஊராட்சி எல்லையிலும் உள்ளது.
இப்பகுதிகளில் உள்ள, பல்வேறு குடியிருப்புகளில் 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கிருந்து தினசரி பல்லாயிரக்கணக்கானோர், வேலை, கல்வி நிமித்தமாக திருவள்ளூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு சென்று வருகின்றனர்.
இவர்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் இருசக்கர வாகனத்திலும், ஆட்டோக்களிலும் தான் சென்று வருகின்றனர்.
இப்பகுதிவாசிகளின் கோரிக்கையினை ஏற்று, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, பூங்கா நகர் வழியாக, காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு அரசு பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது.
இந்த பேருந்தால், அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிக்கு செல்பவர்களுக்கு வசதியாக இல்லை.
இது குறித்து பூங்கா நகர்வாசிகள் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களின் வசதிக்காக, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ராஜாஜிபுரம், பூங்கா நகர் வழியாக பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம் வரை மினி பேருந்துகள் இயக்க வேண்டும்.
மேலும், இப்பகுதியில் சிவ - விஷ்ணு கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களை இணைக்கும் வகையிலும் மினி பேருந்துகள் இயக்கினால் பக்தர்களுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் பயனாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.