தமிழக முதல்வர் ஸ்டாலின்: எந்தவித அரசியல் மாச்சரியங்களுக்கும் இடம் கொடுக்காமல், அரசியல் பார்க்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்வோடு மட்டுமே, கலெக்டர்களின் பணி அமைய வேண்டும். உங்களிடம் பணிகளை ஒப்படைத்து, நாங்கள் அமைதியாக இருந்து விடுவோம் என்று எண்ண வேண்டாம். உங்கள் பணிகளை தலைமைச் செயலர் ஆய்வு செய்யப் போகிறார்; நானும் ஆய்வு செய்வேன்.
டவுட் தனபாலு: கல்லெடுத்து எறியுறாங்க; தொண்டர்கள் தலையில் அடிக்கிறாங்க; தீண்டாமை பார்க்குறாங்க என, அமைச்சர்களின், 'அட்ராசிட்டி' நீண்டுக்கிட்டே இருக்கு... அவங்களுக்கு எதிரா நீங்க அதிரடி, 'ஆக் ஷன்' எடுக்கலைனாலும், சிறு அறிவுரை கூட வழங்காம, கலெக்டர்களுக்கு அறிவுரை சொல்வது நியாயமா என்ற 'டவுட்' வருதே!
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: கடலில் பேனா சின்னம் அமைக்க, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவிக்கிறார். சர்தார் வல்லபபாய் படேலுக்கு, 3,000 கோடி ரூபாய் செலவில் சிலை வைத்த போது, சீமானுக்கு வராத கோபம், இன்றைக்கு வருகிறது. படேல் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்; கருணாநிதி பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலா?
டவுட் தனபாலு: மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, தி.மு.க.,வின் அனாவசிய திட்டத்துக்கு இப்படி முட்டுக் கொடுக்கணுமா... தி.மு.க., கூட்டணி கட்சிகளில் யார் அதிகமா அக்கட்சிக்கு காவடி துாக்கறாங்கன்னு ஒரு போட்டி வச்சா, 'டவுட்' இல்லாம உங்களுக்கு தான் முதலிடம்!
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: விசைத்தறி, கைத்தறிக்கு வழங்கப்படும் இலவச மின்சார அளவை அதிகரித்து முதல்வர் அறிவித்துள்ளார். இது, தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு அல்ல. சில வாரங்களாக இதுபற்றி முதல்வரிடம் பேசி, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
டவுட் தனபாலு: நீங்க கற்பூரம் ஏத்தி சத்தியம் அடிச்சாலும், மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள், 'ஸ்டிரைக்' நடத்திய போதெல்லாம் மவுன சாமியா இருந்துட்டு, இப்ப, திடீர் ஞானோதயம் வந்த மாதிரி அவங்களுக்கு சலுகைகளை அள்ளி வீசுறதுக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மட்டும் தான் காரணம் என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை!