சிவகங்கை : காளையார்கோவில் பகுதியில் யானை மேல் மன்னர் உலா வரும் 15ம் நுாற்றாண்டு சிற்பம் சிவகங்கை தொல்நடைக்குழுவினர் கண்டறிந்தனர்.
இக்குழு நிறுவனர் காளிராஜா, செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன், ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் பாண்டியன் கோட்டை பகுதியில் கள ஆய்வு செய்தனர். அங்கு யானை மேல் மன்னர் உலா வரும் 15 ம் நுாற்றாண்டு சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர்.
புலவர் காளிராஜா கூறியதாவது; காளையார்கோவிலில் வாள் மேல்நடந்த அம்மன் கோயில் முன் உள்ள தெப்பக்குள கிழக்கு பகுதியில் பழமையான கற்துாண், சிற்பங்கள் கண்டறிந்தோம். அங்கு யானையில் மன்னர் அமர்ந்து செல்வதும். அம்மன்னனுக்கு பணியாளர் பின்னால் அமர்ந்து வெண்கொற்றக்குடை பிடித்து செல்வதும், சாமரப் பெண்கள் வெண்சாமரம் வீசுவதுமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
இது 15 ம் நுாற்றாண்டை சேர்ந்தது. இப்பகுதியில் கருங்கற்கள் எனப்படும் வெள்ளை கற்கள் குறைவாகவும், செம்பூரான் கற்கள் அதிகமாகவும் கிடைக்கின்றன. செம்பூரான் கற்களை வட்டமாக வெட்டி, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மேல் சுண்ணாம்பு பூசியும், பூசாமலும் துாண்களாக பயன்படுத்தியுள்ளனர்.
இத்துாண்கள் காரைக்குடி அருகே சங்கரபதி கோட்டையில் முழுமையாக காணலாம். வாள் மேல் நடந்த அம்மன் கோயிலோடு பாண்டிய மன்னரின் கதை பொய் பிள்ளைக்கு மெய்பிள்ளை தந்த திருவிழாவாக கொண்டாடப்படுகிறது, என்றார்.