திருச்சி:திருச்சி 'ஆவின்' நிறுவனம் பால் பவுடர் விற்பனை செய்ததில் 8 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பால் பவுடர் விற்கப்பட்டதில் 8 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது ஆவின் நிறுவன விற்பனை வரவு - செலவு கணக்கை தணிக்கை செய்த போது முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆவின் தயாரித்த பால் பவுடர் கெட்டு போனதாக கூறி 300 ரூபாய்க்கு விற்க வேண்டிய பால் பவுடரை 100 ரூபாய்க்கு விற்றதாக கணக்கு எழுதி உள்ளனர். ஆனால் அந்த பால் பவுடர் பாக்கெட்டுகளை 280 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
இந்த மோசடி ஆவின் நிறுவன உயர் அதிகாரிகள் நடத்திய விற்பனை வரவு - செலவு தணிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில் ஆவினில் பணியாற்றி ஓய்வு பெறும் நிலையில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மற்றும் பணப்பலன்களை நிறுத்தி வைத்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆவின் பால் பவுடர் விற்பனை மோசடி தணிக்கையில் வெளியே தெரிந்துள்ளதால் திருச்சி ஆவின் நிறுவன சேர்மனான அ.தி.மு.க.வைச் சேர்ந்த கார்த்திகேயன் தரப்பினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
குழந்தைகளுக்கு அதிகம் பயன்படும் பால் பவுடர் விற்பனையில் கூட 8 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வெளியாகி உள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மோசடி விஷயத்தை அம்பலப்படுத்துவதற்கு அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன் என ஆவின் ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.