சென்னை மாநகராட்சியின், 15 மண்டலங்களுக்கு தினமும், 120 கோடி லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீர், ஒரு பக்கம் இருந்தாலும், பற்றாக்குறையை போக்க, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வழியாகவும், தினசரி தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
மொத்தமுள்ள, 100 கோடி லிட்டரில், விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சியில், 20 கோடி லிட்டரும், விரிவாக்க பகுதிகளில், 10 கோடி லிட்டரும், லாரி வழியாக வினியோகம் செய்யப்படுகிறது.
குடிசை பகுதி, குழாய் நீரோட்டம் இல்லாத பகுதிகள், குடிநீர் திட்ட பணிகள் துவங்காத பகுதிகளுக்கு, லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக, 425 ஒப்பந்த லாரிகளை வாரியம் நியமித்துள்ளது. இதற்கு, 6 முதல் 7 கோடி ரூபாய் வரை வாடகை செலுத்தப்படுகிறது.
அரசு துறை அலுவலகங்களில், கழிப்பறை உள்ளிட்ட தேவைக்கு, ஆழ்துளை நீரும், லாரி குடிநீரை குடிக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், பல அரசு அலுவலகங்களில், ஆழ்துளை கிணறு அமைக்கவில்லை. மாறாக, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும், லாரி குடிநீர் பயன்படுத்தப்படுகிறது.
அதுவும், காவல் துறை உள்ளிட்ட சில துறைகள் குடிநீரை வாங்கி, பணம் செலுத்துவதில்லை என கூறப்படுகிறது.
இதனால், வாரியத்திற்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சில முக்கிய அரசு துறைகள், 53 கோடி ரூபாயும், அனைத்து மத்திய, மாநில அரசு துறைகள், 150 கோடி ரூபாய்க்கும் மேல், வரி மற்றும் கட்டணம் பாக்கி வைத்து உள்ளன.
இதனால், இலவசமாக லாரி குடிநீர் கேட்கும் அரசு துறைகள், அதற்கான கட்டணத்தை, அத்துறை தலைமை அதிகாரி பெயரின் சி.எம்.சி., நம்பர் வழியாக பதிவேற்றம் செய்ய, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதன் வாயிலாக, வாரியத்திற்கு ஏற்படும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு தடுக்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
உற்பத்தி செலவு அதிகரிப்பதால், அதற்கு ஈடாக வருவாய் கிடைக்கவில்லை. தீயணைப்பு துறைக்கு மட்டும் தான், இலவசமாக தண்ணீர் வழங்குகிறோம். மீதமுள்ள துறைகள் கட்டணம் செலுத்த வேண்டும். இதில், சில போலீசாரின் நடவடிக்கை மனவருத்தத்தை அளிக்கிறது. குடிநீருக்கு பணம் கேட்டால், லாரியை சாலையில் மடக்கி வழக்கு போடுகின்றனர். இதனால், எந்த காவல் நிலையத்திற்கு குடிநீர் வழங்கினாலும், அதற்கான கட்டணம், காவல் ஆணையரின் சி.எம்.சி. நம்பரில் சேர்க்கப்படும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்
'அம்மா' உணவக குடிநீருக்கு கண்காணிப்பு
பெரும்பாலான அம்மா உணவகங்களில், 2,000 மற்றும் 3,000 லிட்டர் கொள்ளளவு தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும், 6,000 லிட்டர் லாரி குடிநீர் வழங்கப்படுகிறது. தொட்டி கொள்ளளவு போக மீதமுள்ள குடிநீர், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், தொட்டியில் கொள்ளளவை வைத்து, அதற்கான கட்டணத்தை வசூலிக்க வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், சட்ட விரோத குடிநீர் விற்பனை தடுக்கப்படும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
சி.எம்.சி., நம்பர்
ஒவ்வொரு துறை சார்ந்த தலைமை அதிகாரி பெயரில், ஒரு சி.எம்.சி., நம்பர் வாரியம் வழங்கும். துறையின் கீழ் எத்தனை அலுவலகங்கள், காவல் நிலையங்கள் இருந்தாலும், அங்கு வினியோகம் செய்யும் குடிநீருக்கான கட்டணம், தலைமை அதிகாரி சி.எம்.சி., நம்பரில் சேர்க்கப்படும். உயர் அதிகாரிகள் கண்காணிப்பு இருப்பதால், கீழ் மட்ட அலுவலகங்களில், முறைகேடாக குடிநீர் வாங்குவது தடுக்கப்படும்.
சட்ட விரோத விற்பனை
அரசு மாணவ - மாணவியர் விடுதிகளுக்கு, வீட்டு வினியோக லாரி கட்டணமும், இதர, அரசு கட்டடங்களுக்கு, வணிகம் சார்ந்த லாரி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
தினமும், 30 கோடி லிட்டர் வழங்கும் லாரி குடிநீரில், 20 கோடி குடிநீருக்கு மட்டுமே முறையாக கட்டணம் வசூலாகிறது. மீதமுள்ள, 10 கோடி லிட்டர் குடிநீர், வீணடிப்பு, இலவசம், சட்டவிரோத விற்பனை போன்ற வகைகளில் செலவாகிறது என, அதிகாரிகள் கூறினர்.
உற்பத்தி செலவு
நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டத்தில், 1,000 லிட்டர் குடிநீர் சுத்திகரிக்க, 36.77 ரூபாய் செலவாகிறது.
இங்கு, ஒரு மாத மின் கட்டணம், 10 கோடி ரூபாய் வரை செலவாகிறது. ஏரிநீரை குடிநீராக்க, 7, 8 ரூபாய் செலவாகிறது. மீஞ்சூர் கடல்நீர் குடிநீராக்கும் திட்டத்தை, சி.எம்.டி.எல்., என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இங்கிருந்து, 1,000 லிட்டர் குடிநீரை, 46.02 ரூபாய் செலுத்தி வாரியம் வாங்கி வினியோகம் செய்கிறது.
- -நமது நிருபர்- -