ஆமதாபாத்-குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார்.
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள, 'சேவா' எனப்படும் எஸ்.வி.டபிள்யு.ஏ., என்ற பெண்கள் சுய உதவிக்குழு அமைப்பின் நிறுவனர் எலா பட். இவர், பெண்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
பெண்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களையும் நடத்திய இவர், பல சர்வதேச விருதுகளை பெற்றவர். இவரும், ஹிலாரி கிளின்டனும் கடந்த ௧௯௯௫ முதல் நண்பர்களாக பழகி வந்தனர்.
கடந்த ௨௦௧௮ல், ஹிலாரி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், 'சமூகநல ஆர்வலரான எலா பட்டின் பணி புரட்சிகரமானது' என, விவரித்திருந்தார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக எலா பட், கடந்த நவம்பரில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஹிலாரி நேற்று குஜராத்துக்கு இரண்டு நாள் பயணமாக வந்தார்.
நேற்று எலா பட்டின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய ஹிலாரி கிளின்டன், பின் சேவா உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.