தஞ்சாவூர்-''டெல்டா மாவட்டங்களில், பருவம் தவறிய மழையால், 2.15 லட்சம் ஏக்கர் பயிர் பாதிப்பக்கப்பட்டுள்ளது,'' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில், கடந்த, 1ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன.
மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மற்றும் நேரடி கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்திருந்த நெல்லும் பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கராபாணியும், நாகை, மயிலாடு துறை மாவட்டங்களில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் இது குறித்து நேற்று ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே புத்துார், ஒரத்தநாடு அருகே அம்பலாப்பட்டு, பட்டுக்கோட்டை அருகே புதுக்கோட்டை உள்ளூர் ஆகிய பகுதிகளில், மழையால் சாய்ந்த நெற்பயிர்களை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டார்.
அப்போது, விவசாயிகள், அழுகிய பயிர்களை அமைச்சரிடம் காட்டி, உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
அதே போல, உக்கடை கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து, விவசாயகளிடம் கேட்டறிந்தார்.
அம்மாபேட்டை புதுாரில் அவர் கூறியதாவது:
முதல்கட்டமாக, டெல்டா மாவட்டங்களில், 2.15 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், உளுந்து, கடலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாதிப்பு கூடுதலாக இருக்கலாம். பாதிப்புகளை உணர்ந்துள்ளோம். அதன் ஆய்வறிக்கையை, வரும், 6ல் முதல்வரிடம் வழங்கவுள்ளோம். முதல்வர் இழப்பீடு தொகையை அறிவிப்பார்.
பயிர் இன்சூரன்ஸ் முழுமையாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். மழைக்கு முன், நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட நெல்லை ஆய்வு செய்த போது, 15 சதவீதம் ஈரப்பதம் இருந்தது.
மழைக்குப் பின், கொண்டு வரப்பட்ட நெல்லை ஆய்வு செய்தால், 21 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது.
இந்நிலையில், 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
மத்திய அரசிடம் முதல்வர் பேசி, ஈரப்பதம் தளர்வு பெற்றுத் தருவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது, உணவு, கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.