புதுக்கோட்டை-கறம்பக்குடி அருகே, பெண்ணை கொலை செய்த வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, பல்லவராயன்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம். அவரது மனைவி பழனியம்மாள், 35. தம்பதிக்கு, நான்கு மகள்கள் உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக திருச்செல்வம், மலேஷியாவில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அதனால், மகள்களுடன், பெற்றோர் வீட்டில் இருந்த பழனியம்மாள், கறம்பக்குடியில் உள்ள கடையில் வேலை செய்தார்.
கடந்த ஆண்டு, நவ., 23-ம் தேதி, மாமனார் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற பழனியம்மாள் மாயமானார். இது குறித்து, அவரது தந்தை தங்கவேல் கொடுத்த புகார்படி, கறம்பக்குடி போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், கடந்த, 27ம் தேதி, பல்லவராயன்பத்து கிராமத்தில், காட்டுப்பகுதியில் பழனியம்மாள் சடலமாக கிடந்தார்.
இது குறித்து வழக்கு பதிந்த கறம்பக்குடி போலீசார், விசாரணை நடத்தியதில், கொத்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், 19, என்பவர், பழனியம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை எஸ்.பி., வந்திதா பாண்டே பரிந்துரைப்படி, பாண்டியராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார், அதன்படி, நேற்று முன்தினம் இரவு, பாண்டியராஜன், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.