கரூர்-கரூர் அருகே, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், அ.தி.மு.க., நிர்வாகி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
கரூர், ராயனுாரைச் சேர்ந்தவர் வடிவேல், 55; மாநகராட்சி, 32வது வார்டு அ.தி.மு.க., செயலர். கிருஷ்ணராயபுரம், பொய்கைபுதுாரைச் சேர்ந்தவர் மகாதேவன், 32; இருவருக்கும் பணம், கொடுக்கல் - வாங்கல் காரணமாக முன் விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு, வடிவேல், தன் நண்பர் பிரகாஷ் என்பவருடன், 'பைக்'கில் திருமாநிலையூர் - ராயனுார் சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மகாதேவன், அவரது தம்பி பாலா, 30; நண்பர் சேகர், 32; ஆகியோர், வடிவேலுவை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர்.
கழுத்து, நெஞ்சு பகுதிகளில் பலத்த காயமடைந்த வடிவேல், கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை இறந்தார்.
வடிவேல் மகன் கிரி பிரசாத் புகாரின்படி, மகாதேவன் உட்பட மூன்று பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, பசுபதிபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.