திருநெல்வேலி---மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக, தாளாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அதை மறைக்க முயன்ற தாளாளர் மனைவி மற்றும் தலைமையாசிரியை ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவியர் மூன்று பேரிடம் பள்ளி தாளாளர் குத்புன் நஜீப், 45, பாலியல் ரீதியாக தவறான தொடுதலில் ஈடுபட்டார்.
இது குறித்து, மாணவியர் புகார் அளித்தும், பள்ளி தலைமையாசிரியை காதரம்மாள், 58, நடவடிக்கை எடுக்கவில்லை.
முஸ்லிம் பெண்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, மேலப்பாளையம் போலீசார், பள்ளி தாளாளர் குத்புன் நஜீபை இரவில் கைது செய்தனர்.
மேலும், மாணவியர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மறைத்த பள்ளி தலைமை ஆசிரியை காதரம்மாள், 'இது குறித்து வெளியே கூறக்கூடாது' என, மாணவியரிடம் கூறி மறைக்க முயன்ற தாளாளரின் மனைவி முகமது பாத்திமா, 40, ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.