ஈரோடு,-''ஸ்மார்ட் மின் மீட்டர் அமைப்பதற்காக, 'டெண்டர்' விடும் பணி நடந்து வருகிறது,'' என, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, ஈரோட்டில் நேற்று பல பகுதிகளில் ஓட்டு சேகரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:
தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதி படி, மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும். முதல்வர் அதை விரைவில் நிறைவேற்றுவார்.
பிரச்னை என்னவென்றால், கணக்கெடுப்பு செய்யும் பணியாளர் எண்ணிக்கை குறைவாக உள்ளது; அதை நிரப்ப வேண்டும்.
தற்போது, 'ஸ்மார்ட் மீட்டர்' அமைப்பதற்காக டெண்டர் விடும் பணி நடக்கிறது. சில வழிகாட்டுதலுடன், மாதாந்திர மின் கட்டண முறை அமல்படுத்தப்படும்.
கடந்த, 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தாதது போல மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
கடந்த, 2010ல் வீடுகளுக்கு, 600 யூனிட் பயன்படுத்தியவர்கள், 1,120 ரூபாய் கட்டணம் செலுத்தினர். அதுவே, 2017ல், 2,440 ரூபாய் செலுத்தினர். அதாவது, 117 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது.
கடந்த, 2010ல் விசைத்தறியில், 1,000 யூனிட்டுக்கு, 310 ரூபாய் செலுத்தியவர்கள், 2017ல், 715 ரூபாய் செலுத்தினர். இது, 103 சதவீதம் உயர்வாகும். இதுபோல் ஒவ்வொரு துறையிலும் உயர்த்தினர்.
இவ்வாறு அவர் கூறினார்.