வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்......
ஆர்.தையல்நாயகி, நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:
'தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத மத்திய பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது' என விமர்சனம் செய்துள்ளார், முதல்வர் ஸ்டாலின். மத்திய பட்ஜெட் ஒரு பக்கம் இருக்கட்டும்... தி.மு.க.,வின் வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப்போட்டு, மக்கள் ஏமாந்தது என்னென்ன என்ற பட்டியலை தருகிறேன்... 'விடியல் ஆட்சி' தருவதாக சொன்ன நீங்கள், இனியாவது அவற்றை கவனிப்பீர்களா என்று பார்ப்போம், முதல்வர் அவர்களே...
![]()
|
குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை தரப்படும் என்றீர்களே... அது கிடைக்காத ஏமாற்றத்தில் மக்கள் உள்ளனரே, அதற்கு உங்களின் பதில் என்ன?
'விதவையர் மாநாடு நடத்தி, மதுவை அறவே ஒழிப்போம்' என்றார், உங்களின் அருமைத் தங்கை கனிமொழி. தற்போது, 'தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், மது விலக்கு பற்றி சொல்லவே இல்லை' என, 'அந்தர்பல்டி' அடிக்கிறார். இதைவிடவா, மக்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது மத்திய பட்ஜெட்!
கரூர் கம்பெனியின் அதிபரான செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.,வில் இருந்த போது, 'அவரின் ஊழலை வெளிக்கொண்டு வருவேன்' என்று சூளுரைத்தீர்கள். இப்போது, அதே பாலாஜி உங்கள் கட்சிக்கு வந்தவுடன், முப்பெரும் துறை கொடுத்து, அழகு பார்த்துள்ளீர்கள். இந்த அற்ப செயலை விடவா, மத்திய பட்ஜெட்டை பார்த்து மக்கள் ஏமாறப் போகின்றனர்.
![]()
|
ஒப்பந்த பணி ஒழிப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் என, 'உட்டாலக்கடி' தேர்தல் உறுதிமொழிகளை வாரி வழங்கிய நீங்கள், தற்போது அதை மறந்து, அமைச்சர் பெருமக்களின் புகழ்ச்சியில் மயங்கி கிடக்கிறீர்கள். உங்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு, மத்திய பட்ஜெட் ஏமாற்றம் ஒரு பொருட்டே இல்லை என்று கூறலாம்.
சட்டசபை தேர்தலுக்கு முன், மக்களின் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி, ஆட்சியைப் பிடித்த நீங்கள் தான், மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளீர்கள். 'ஏமாற்றம் அளிக்கிறது' என்ற சொல்லின் அகராதியே, ஸ்டாலின் என்றாகி விட்டது. பொய்யர்களில் மகா பொய்யராக வலம் வரும் நீங்கள், 'உங்களுக்கு வந்தால் ரத்தம், அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி' என்ற ரீதியில், மத்திய பட்ஜெட்டை விமர்சிப்பது அபத்தமானது!
Advertisement