வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''பல கோடி ரூபாய் செலவு செஞ்சு கட்டுன விளையாட்டு வளாகம் முடங்கி கிடக்கு வே...'' என்றபடியே, மேல் துண்டால் பெஞ்சை தட்டிவிட்டு அமர்ந்தார் அண்ணாச்சி.
''எந்த ஊர்ல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''வேலுார் மாவட்டம், காட்பாடியில, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பா, 19 கோடி ரூபாய் செலவுல திறந்தவெளி விளையாட்டு வளாகம் கட்டுனாவ... போன வருஷம் மார்ச் மாசம், அந்த வளாகத்தை திறக்கவும் செஞ்சிட்டாவ வே...
![]()
|
''மொத்தம், 16 ஏக்கர் பரப்புல பரந்து விரிந்து கிடக்குற இந்த இடத்துல கோகோ, இறகுப்பந்து, கூடைப்பந்து, கபடி, ஹாக்கி, வாலிபால் போட்டிகள் நடத்த மைதானம், 400 மீட்டர் தடகள ஓடுபாதை, நீச்சல் குளம் என, அம்புட்டு வசதிகளும் இருக்கு வே...
''யானை வாங்கிட்டு அங்குசம் வாங்காத கதையா, எல்லா வசதிகளும் இருந்தும், விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர்களை நியமிக்காம விட்டுட்டாவ... இதனால கோடிக்கணக்கான ரூபாய் பணம் வீண் ஆயிட்டு வருது வே...'' என்றார் அண்ணாச்சி.
''பசங்க படிக்குற இடத்துல எதுக்காக சினிமா விழாக்களை நடத்துறாங்க...'' என, ஆவேசமாக ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''என்ன ஓய்... ரொம்ப சூடா இருக்கிறீர்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''ரசிகர்களுக்கு வெறியேத்தி விட்டு சினிமாவை ஓட வைக்குற காலமெல்லாம் மலையேறிப் போச்சுங்க... இது புரியாம, திரைப்படத்தின் விளம்பரத்துக்காக, சினிமா விழாக்களை கல்வி நிறுவனங்களில் நடத்துற பழக்கம், இப்ப மெல்ல தலை துாக்குதுங்க...
''நடிகர் சந்தீப் கிஷண் நடிச்ச, மைக்கேல் திரைப்படத்தின் விழா, சென்னையில் உள்ள பள்ளி வளாகத்தில் சமீபத்துல நடந்துச்சுங்க... தனுஷ் நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்குற வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவும், தனியார் கல்லுாரி வளாகத்துல முந்தா நேத்து நடந்துச்சுங்க...
''கல்வி நிலைய வளாகங்களுக்குள்ள சினிமா விளம்பர நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கணும்னு சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''பெரிய குடும்பத்து பேரை சொல்லியே அதிகாரிகளை அலற விடறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக அரசின் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி இருக்காரோல்லியோ... அவருக்கு, அரசியல் ரீதியா ரெண்டு பி.ஏ.,க்களும், 'பர்சனலா' ரெண்டு, பி.ஏ.,க்களும் இருக்கா...
''இவர்கள்ல, 'சீனியர்' பி.ஏ., ஒருத்தர் இருக்கார்; அவரோட பிரதாபங்கள் தான் ஓய் இப்ப, 'பாப்புலர்' ஆகிண்டு வரது... வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் வேலை பார்க்குற அதிகாரிகளை பத்தி, உயர் அதிகாரிகளுக்கு, 'மொட்டை பெட்டிஷன்' போடுறதையே இவர், முழுநேர வேலையா செஞ்சிண்டு இருக்கார் ஓய்...
![]()
|
''அப்பறமா, 'அந்த புகார் மேல நடவடிக்கை எடுக்காம நான் பார்த்துக்கறேன்'னு சம்பந்தப்பட்டவாளிடம் சொல்லி, தனக்கு வேண்டிய காரியங்களை சத்திச்சுக்கிறார்...
''அதோட, 'நான், மற்ற அமைச்சர்களின், பி.ஏ., மாதிரி கிடையாது; முதல்வர் குடும்பத்திலிருந்து நேரடியா நியமிக்கப் பட்டவனாக்கும்...
''யார் நினைச்சாலும் என்னை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது'ன்னு கெத்தாக பேசி, துறை அதிகாரிகளை அலற விடறார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.