சென்னை,-சென்னை - ரேணிகுண்டா; அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடங்களில், ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, 'குரூப் - ஏ' வழித்தடம், 'குரூப் - பி' வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது.
'குரூப் - ஏ' வழித்தடத்தில் அதிகபட்சமாக 160 கி.மீ., வரையும்; 'குரூப் - பி' தடத்தில் 130 கி.மீ., வரையும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.
சென்னை -- ரேணிகுண்டா; அரக்கோணம் -- ஜோலார்பேட்டை வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்வதற்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளன.
சென்னை -- ரேணிகுண்டா வழித்தடத்தில், தற்போது மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வேகத்தை 130 கி.மீ., வரை அதிகரிப்பதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி, விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரக்கோணம் -- ஜோலார்பேட்டை வழித்தடத்தில், 'வந்தே பாரத், சதாப்தி' போன்ற அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த தடத்தில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் கேட்கப்பட்டு உள்ளது.
சென்னை -- கூடூர் வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதுபோல, ஜோலார்பேட்டை -- போத்தனுார், சென்னை - திண்டுக்கல் வழித்தடங்களிலும் வேகத்தை அதிகரிக்கும் பணி நடக்கிறது.
தெற்கு ரயில்வேயில் மொத்தம் 2,485 கி.மீ., துார பாதையில், ரயில்கள் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன. சென்னை -- கோவை; சென்னை - மதுரை; ஈரோடு - திருச்சி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் இதில் அடங்கும்.
இதேபோல், மதுரை - வாஞ்சி மணியாச்சி; திண்டுக்கல் - பொள்ளாச்சி; திருநெல்வேலி - தென்காசி உள்ளிட்ட வழித்தடங்களில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.