வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மத்திய பட்ஜெட்டில் கோவையின் ரயில்வே தேவைகளுக்கு சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படாததால், மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது; கோவை சந்திப்பு மறுசீரமைப்பு எப்போது துவங்குமென்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2 லட்சத்து, 40 ஆயிரம் கோடி நிதியில், தெற்கு ரயில்வேக்கு, 11 ஆயிரத்து 314 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இந்த ஒதுக்கீட்டில், தமிழகத்துக்கு மட்டும், 6,080 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. அதில், கோவையை உள்ளடக்கிய சேலம் கோட்டத்துக்கு, மிகவும் குறைந்தபட்சமாக, 345 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கடும் அதிருப்தி
கடந்த பட்ஜெட்டில் வெறும், 70 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், இப்போது ஐந்து மடங்கு அதிக ஒதுக்கீடு என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சேலம் கோட்டத்தில், 45 சதவீத வருவாயை ஈட்டித்தரும் கோவை ரயில்வே ஸ்டேஷன் உட்பட ரயில்வே துறைக்கு அதிக வருவாய் தரக்கூடிய, தொழில் வளம் மிக்க நகரங்களின் ஸ்டேஷன்களைக் கொண்ட கோட்டத்துக்கு இது மிகவும் குறைவான ஒதுக்கீடு என்று கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
இடம்பெறுமா?
சேலம் கோட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலும், கோவை மற்றும் சுற்று வட்டார ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்பாட்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. 'அம்ருத் பாரத்' திட்டத்தில், 15 ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த எட்டு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றில் கோவை நகரிலுள்ள வடகோவை, பீளமேடு, போத்தனுார் ஸ்டேஷன்கள் இடம் பெறுமா என்பதும் சந்தேகமாகவுள்ளது.
ஏற்கனவே, மறுசீரமைப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ரயில்வே ஸ்டேஷன்கள் பட்டியலில் கோவை சந்திப்பு இடம் பெறவில்லை. பா.ஜ., மகளிரணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல்வேறு எம்.பி.,க்கள் பலரும், மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த பின்பே, கோவை சந்திப்பு மறுசீரமைப்புத் திட்டத்தில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
ஆனால், மத்திய பட்ஜெட்டில் அதற்கும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், கோவை சந்திப்பு ரூ.400 லிருந்து 500 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக சேலம் கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி எப்போது ஒதுக்கப்படும், எப்போது பணிகள் துவங்கும் என்பது பற்றி திட்டவட்டமான தகவல் இல்லாததால், இந்தப் பணி இப்போதைக்கு நடக்குமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த ஆண்டிலேயே இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, மறு சீரமைப்புப் பணியைத் துவக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதைத் தவிர்த்து, போத்தனுார், வடகோவை, பீளமேடு மற்றும் சிங்காநல்லுார் ஸ்டேஷன்களை மேம்படுத்தவும், குறைந்தபட்சம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் நிதி ஒதுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சந்திக்க முடியும்!
தென் மாவட்டங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கவும், சென்னை, பெங்களூரு நகரங்களுக்குக் கூடுதல் ரயில்களை இயக்கவும் பல்வேறு தொழில் அமைப்புகளும் கோரிக்கை விடுத்தும் அதற்கும் எந்த அறிவிப்புமில்லை.
மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு, புதிய ரயில்கள் குறித்து அறிவிக்காவிட்டாலும், இந்த ஆண்டிற்குள் இவற்றை நிறைவேற்றினால்தான், அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி வேட்பாளரால் துணிச்சலாக மக்களை சந்திக்க முடியும்.
-நமது சிறப்பு நிருபர்-