வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு--கர்நாடகாவுக்கு இன்று மீண்டும் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, துமகூரில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை துவக்குவது உட்பட கர்நாடகாவில் ஒரே நாளில் ஆறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
![]()
|
கர்நாடகா சட்டசபைக்கு இன்னும் மூன்று மாதம் பதவிக் காலம் உள்ளது. புதிய சட்டசபைக்காக மே மாதம் தேர்தல் நடக்கும். இதனால், மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மத்திய - மாநில திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து வருகிறார்.
இன்று கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி, டில்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு, முற்பகல் 11:30 மணிக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே உள்ள மாதவராவுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் 'எரிசக்தி வார விழா'வை துவக்கி வைக்கிறார்.
பல்வேறு மாநிலங்களில் உள்ள 67 பெட்ரோல் பங்க்குகளில், 20 சதவீதம் எத்னால் கலந்த பெட்ரோல் வினியோகத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைக்கிறார். பின்னர், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்துகிறார்.
பசுமை ஹெலிகாப்டர்
பின், அங்கிருந்து பிரதமர் மோடி துமகூரு செல்கிறார். துமகூரு குப்பி தாலுகா பிதரில்லாவில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஹெச்.ஏ.எல்., தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, 615 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி நிறுவனமான இந்நிறுவனம், துவக்கத்தில் எல்.யு.எச்., எனப்படும் இலகு ரக ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும். ஆரம்ப முயற்சியாக, ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படும். பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்படும்.
இந்த தொழிற்சாலையில் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள், இந்திய பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும் தயாரிக்கப்பட உள்ளன. அதிக திறன் படைத்த ஏற்றுமதி செய்யக்கூடிய, சிவில் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் வருங்காலத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
ரூ.4 லட்சம் கோடி
இந்த தொழிற்சாலை, மூன்று முதல் 15 டன் எடை கொண்ட 1,000த்திற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்து, 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளில், 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை செய்ய திட்டமிட்டுள்ளது.
துமகூரில் இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும். இந்த பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விண்வெளி உபகரணங்கள் சூழலை மேம்படுத்தும். பள்ளி, கல்லுாரிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் திறன் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும். அருகில் உள்ள பல்வேறு ஊராட்சிகளுக்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்கும்.
தொழிற்சாலையை திறன்மிக்க முறையில் இயக்குவதற்கு தேவையான ஹெலி - ஓடுதளம், வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் உருவாக்கப்பட உள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். ஹெலிகாப்டரை வடிவமைத்தல், அதன் மேம்பாடு மற்றும் உற்பத்தி என, 'தற்சார்பு இந்தியா' என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்யும்.
எந்த வித இறக்குமதியும் செய்யாமல், இந்தியாவின் ஹெலிகாப்டர் சார்ந்த ஒட்டுமொத்த தேவையையும் இத்தொழிற்சாலை நிறைவேற்றும்.
![]()
|
ஜல்ஜீவன் திட்டம்
அதே இடத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில், துமகூரிலுள்ள திப்டூர் மற்றும் சிக்கநாயக்கனஹள்ளியில் 43௦ கோடி ரூபாய் மதிப்பிலான 'ஜல்ஜீவன்' திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின் மூலம், அந்த பகுதியில் உள்ள ௧௪௭ கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வசதி செய்யப்படும்.
இதை பயன்படுத்தி துமகூரு சுற்று வட்டார பகுதிகளில், பா.ஜ.,வின் செல்வாக்கை உயர்த்துவது அக்கட்சியின் நோக்கமாகும்.