கோவை: கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் விற்பனை விலை முறையான அறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ், 350 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் உள்ளூர் விற்பனை அல்லது சில்லறை விற்பனை என்ற முறையில், பொதுமக்களுக்கு நேரடியாக பால் விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பசும்பாலின் விலை கடந்த, 1ம் தேதி முதல், 44 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மலுமிச்சம்பட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சங்கங்களில், முறையான அரசு உத்தரவின்றி பாலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கூட்டுறவு சங்கங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு, பாலின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்சமாக 'பேட்' 3.0, எஸ்.என்.எப்., 7.7 தரமுள்ள பசும்பால், 28.55 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதிகபட்ச கொள்முதல் விலை, 40.95 ரூபாய். பேட் 5.9, எஸ்.என்.எப்., 8.0 என இருப்பின் கொள்முதல் விலையானது, 37.67 ரூபாய்.
கொள்முதல் விலையை விட, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு லிட்டருக்கு, 1.25 ரூபாய் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த கூடுதல் விலை, சங்கங்களின் நடைமுறை செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் விற்பனையை பொறுத்தவரை லிட்டர், 37 ரூபாய்க்குத்தான் விற்பனை செய்ய வேண்டும். கொள்முதல் விலையே, 37.67 ரூபாயாக இருக்கும்போது, 37 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, விற்பனை விலையை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கூட்டுறவு சங்கங்களாக முடிவெடுத்து விற்பனையை விலையை உயர்த்த முடியாது. ஆனால், சில சங்கங்கள் தன்னளவில் தீர்மானம் இயற்றி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகத் தெரிகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
வாய்மொழி உத்தரவின்மூலம் உயர்த்தப்பட்ட விலை முறையாக கணக்கு காட்டப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து அரசு முறையாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.