திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கொள்ளார் காட்ராம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள், 44; இவர், கடந்த மாதம் 30ம் தேதி, நேரு வீதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்றார்.
அவருக்கு, பணம் எடுக்க தெரியாததால், அங்கிருந்த நபரிடம் பணம் எடுத்து தரும்படி, ஏ.டி.எம்., கார்டை கொடுத்துள்ளார். அந்த நபர், அவருக்கு பணத்தை எடுத்து கொடுத்து விட்டு, அவரது கவனத்தை திசை திருப்பி, வேறொரு ஏ.டி.எம்., கார்டை கொடுத்து விட்டு தலைமறைவானார். சிறிது நேரத்தில், அருளின் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த அருள், திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று காலை, பெருமாள் கோவில் தெருவில் போலீசார் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாபேட்டையைச் சேர்ந்த சூரியபிரகாஷ், 35; என்பதும், கடந்த 30ம் தேதி அருளை ஏமாற்றி, 30 ஆயிரம் திருடியதும், திண்டிவனத்தில் வேறொரு நபரிடம் ஏ.டி.எம்., கார்டை ஏமாற்றி, 15 ஆயிரம் ரூபாய் திருடியதும் தெரியவந்தது.
அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 32 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.